இந்தியன் வங்கியின் முன்னாள் சேர்மன் கோபாலகிருஷ்ணன் காலமானார்: முதல்வர், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

சென்னை: இந்தியன் வங்கியின் முன்னாள் சேர்மன் கோபாலகிருஷ்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தியன் வங்கியின் முன்னாள் சேர்மன் எம்.கோபாலகிருஷ்ணன்(வயது 86). இவர் சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோயில் அருகில் உள்ள ரங்கா சாலையில் உள்ள இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.50 மணியளவில் காலமானார். அவரது உடல் நேற்று மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பெசன்ட்நகர் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மறைந்த கோபாலகிருஷ்ணன் பணி ஓய்வுக்கு பிறகு தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவராக இருந்து வந்தார்.

கோபாலகிருஷ்ணன் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் பென்ஜமின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், யாதவ மகா சபையினர் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் எடப்பாடி பழனி சாமி: தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர்கோபாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைதெரிவித்துக் கொள்கிறேன். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: கோபாலகிருஷ்ணன் காலமான செய்தியறிந்து வேதனையுற்றேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்: இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவரான கோபாலகிருஷ்ணன் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து துயரத்திற்கு உள்ளானேன்.  அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்குஎனது ஆழ்ந்த இரங்கலைதெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி,  பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக பாஜ தலைவர் எல்.முருகன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், தமிழ்நாடு யாதவ மகா சபை துணை தலைவர் எம்.வி.சேகர் உள்ளிட்ட தலைவர்களும் கோபாலகிருஷ்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: