இன்ஜினியரிங் சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கான ஆன்லைன் கவுன்சலிங் தொடங்கியது

சென்னை: பிஇ, பிடெக் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் நேற்று வெளியானதை அடுத்து, சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கான ஆன்லைன் கவுன்சலிங் நேற்று  தொடங்கியது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதுனுடன் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகள் 458 இயங்கி வருகின்றன. இவற்றில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான இடங்கள் 1 லட்சத்து 61 ஆயிரத்து 877 உள்ளன. தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 60 ஆயிரம் மாணவ. மாணவியர் விண்ணப்பித்து இருந்தனர். இதையடுத்து 28ம் தேதி ரேங்க் பட்டியலை உயர் கல்வித்துறை வெளியிட்டது.

இதன் தொடர்ச்சியாக, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சலிங் அக்டோபர் 1ம் தேதியும், பொதுப்பிரிவினருக்கான கவுன்சலிங் அக்டோபர் 8ம் தேதியும், எஸ்சிஏ எஸ்சி மாணவர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 29, 30ம் தேதிகளில் நடக்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. பிஇ, பிடெக்  கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள, மாற்றுத் திறனாளிகள் 149, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 855 பேருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு நேற்று, ஆன்லைன் மூலம் கவுன்சலிங் நடந்தது. நேற்று காலை 9 மணியில் இருந்தே இந்த கவுன்சலிங் தொடங்கியது. தமிழகம் முழுவதும் உள்ள 40க்கும் மேற்பட்ட சேவை மையங்களில் மாணவர்கள் வந்து அங்கிருந்தபடியே ஆன்லைன் மூலம் கவுன்சலிங்கில் பங்கேற்றனர். இதையடுத்து, பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கவுன்சலிங் 8ம் தேதி தொடங்க உள்ளது.

Related Stories: