புதிதாக 5688 பேருக்கு தொற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை தாண்டியது: உயிரிழப்பு 9500ஐ கடந்தது

சென்னை: தமிழகத்தில் புதிதாக 5688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து மொத்த பாதிப்பு 6 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 9500ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தினசரி 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுவருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் தினசரி தொற்று ஆயிரத்திற்கு மேல் பதிவாகிவருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 5688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதைச் சேர்த்து மொத்த பாதிப்பு 6 லட்சமாக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1289 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று மட்டும் 87,647 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 5,688 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 1289 பேர், செங்கல்பட்டில் 356 பேர், திருவள்ளூரில் 260 பேர், காஞ்சிபுரத்தில் 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 3 ஆயிரத்து 290 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 3,400 பேர் ஆண்கள். 2,288 பேர் பெண்கள். தற்போது வரை 3 லட்சத்து 64 ஆயிரத்து 129 ஆண்கள், 2 லட்சத்து 39 ஆயிரத்து 130 பேர் பெண்கள், 31 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும் 2,288 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை  5 லட்சத்து 47 ஆயிரத்து 335 பேர் குணமடைந்துள்ளனர். 46 ஆயிரத்து 369 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 66 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 18 பேர், கோவையில் 8 பேர், செங்கல்பட்டில் 6 பேர், திருவள்ளூரில் 5 பேர், திருப்பத்தூர் 4 பேர், ராணிப்பேட்டை, சேலம், திருச்சியில் தலா 3 பேர் என தமிழகம் முழுவதும் மொத்தம் 66 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் 9 பேர் இணை நோய்கள் இல்லாமல் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மட்டுமே மரணம் அடைந்துள்ளனர். 57 பேர் பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இணை நோய்களுடன் மரணம் அடைந்துள்ளனர். இதைச் சேர்த்து மொத்த மரணங்களின் எண்ணிக்கை 9,586 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: