திருச்சியில் தற்காலிக சந்தையின் மேற்கூரை சரிந்து விழுந்தது: கொட்டகையை அப்புறப்படுத்தி, புதிய கொட்டகை அமைக்கும் பணி தீவிரம்

திருச்சி: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வரும் 30ம் தேதி (நாளை) வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக காந்திசந்தை காய்கறி சந்தை 4 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக சில்லறை வியாபாரிகளுக்கு மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானம், திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க சாலை உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக சில்லறை விற்பனை காய்கறி சந்தை அமைக்கப்பட்டன. மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட இந்த தற்காலிக காய்கறி சந்தைகளில் வியாபாரிகளுக்கு போதிய இட வசதி செய்து கொடுக்கப்பட்டது.

மேலும் வெயிலுக்கு நிழலாக கொட்டகையும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு திருச்சி மாநகரில் பரவலாக மழை பெய்தது. இதனால் திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக காய்கறி சந்தைக்கான கொட்டகை, மண் அரிப்பின் காரணமாக, திடீரென சரிந்து விழுந்தது. இங்கு 52 கடைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், காலை முதலே கொட்டகையின் உறுதித் தன்மையில் சந்தேகமடைந்த வியாபாரிகள் கொட்டகைக்கு வெளியே நின்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

வியாபாரிகள் ஒரு சிலர் மட்டுமே உள்ளே அமர்ந்து இருந்ததால் நல்வாய்ப்பாக மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. சாய்ந்த கொட்டகையை உடனே சரி செய்து தரக்கோரி காய், கனி வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் கொட்டகையை அப்புறப்படுத்தி, புதிய கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: