பெண்களுக்கு நிராசையாகும் தங்க ஆசை.. ஒரே நாளில் சவரன் ரூ. 400 உயர்ந்து ரூ. 42,992க்கு விற்பனை : 7 மாதங்களில் தங்கம் விலை சவரன் ரூ.13,000 உயர்வு!!!

சென்னை: தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து சவரன் 43 ஆயிரத்தை நெருங்கியது. விரைவில் ரூ.50 ஆயிரத்தை தொடும் என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொருளாதாரமே நிலை குலைந்து இருக்கும் சூழ்நிலையிலும் தங்கம் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு சிறுக, சிறுக பணம் சேர்த்து நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 20ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.37,616க்கு விற்கப்பட்டது.

அதன் பிறகு தங்கம் விலை குறையாமல் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. தொடர்ச்சியாக 16வது நாளாக நேற்று ஒரு கிராம் ரூ.5,324க்கும், சவரன் ரூ.42,592க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 17வது நாளாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது கிராமுக்கு ரூ.27 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5351க்கும், சவரனுக்கு ரூ.216 அதிகரித்து ஒரு சவரன் ரூ.42,808க்கும் விற்கப்பட்டது. அதே போல் மாலை சவரனுக்கு ரூ.184 உயர்ந்து சவரன் ரூ. 42,992க்கு விற்பனையாகிறது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்சம் என்ற சாதனையை படைத்தது. தற்போது தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை நெருங்கியுள்ளது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் விரைவில் சவரன் ரூ.50 ஆயிரத்தை தொட வாய்ப்பு உள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

அது மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக கடந்த 17 நாட்களில் சவரன் ரூ.5,17 2அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை தொடர் உயர்வு நகை வாங்குவோரை கலக்கமடைய செய்தது மட்டுமல்லாமல் ஒருவித பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில், இன்னும் விலை அதிகரிக்கும் என்று நிறைய பேர் தங்கத்தை வாங்க வருகின்றனர். இதனால் வழக்கம்போல் கடைகளில் வியாபாரம் நடைபெறுவதாகவும் நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். தங்கம் விலை உயர்ந்து வரும் அதே வேகத்தில் வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.79.30க்கு விற்பனையாகிறது.

Related Stories: