தமிழகத்தில் 27ம் தேதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: வெப்ப சலனத்தால் ஏற்பட்ட காற்று சுழற்சி நீடிப்பதை அடுத்து தமிழகத்தில் 27ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரள-தமிழக எல்லையிலும் மழை பெய்து வருகிறது.

மேலும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெப்ப சலனம் காரணமாக வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டு அதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று சின்னகல்லாரில் 70 மிமீ, தேவாலா 60 மிமீ, வால்பாறை 40 மிமீ, தாமரைப்பாக்கம், பொன்னேரி, பெரும்புதூர், பெரியாறு, செங்கல்பட்டு, நடுவட்டம், மாமல்லபுரம், காஞ்சிபுரம், அரக்கோணம் 10 மிமீ மழை பெய்துள்ளது.

சென்னை மற்றும் சென்னையில் புற நகரில் நேற்று மாலையில் சில இடங்களில் திடீர் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியது. முக்கிய சாலைகளிலும், புறநகரில் சில பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள வளி மண்டல காற்று சுழற்சி மேலும் அதே இடத்தில் நீடிப்பதால், தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தமிழகத்தை ஒட்டிய கேரள பகுதி மற்றும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. இந்த நிலை 27ம் தேதி வரை நீடிக்கும்.

Related Stories: