5 ஆண்டுகளாக தொடரும் சர்ச்சையால் ஆமை வேகத்தில் நடைபோடும் எண்ணூர் விரிவாக்க மின்திட்டம்: மின்வெட்டு, ஒதுக்கிய நிதி வீணாகும் அவலம்

சென்னை: எண்ணூர் விரிவாக்க மின்திட்டப்பணி சுமார் 5 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் விரிவாக்க பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதி வீணடிக்கப்படுகிறது. மேலும் கட்டுமான பொருட்களுக்கான விலையும் உயர்ந்து கொண்டே இருப்பதால் விரிவாக்க பணிக்கு மக்களின் வரிப்பணத்தில்தான் மீண்டும் தேவையில்லாமல் நிதி ஒதுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: எண்ணூர் அனல் மின் நிலையத்தில் 450 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. அதனுடைய காலம் காலாவதியாகி விட்டதால் அதை மூடிவிட்டனர். தொடர்ந்து அதே வளாகத்தில் 660 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக் கூடிய ‘எண்ணூர் விரிவாக்க மின் நிலையம்’ அமைக்க வாரியம் திட்டமிட்டது. உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி அடிப்படையில் நிறுவனம் ஒன்றுக்கு சுமார் ₹3,500 கோடிக்கு மேல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. 2014ல் கட்டுமானப் பணிகளை தொடங்கி 2018ல் உற்பத்தியை துவக்க வேண்டும் என்பது அந்த ஒப்பந்தத்தின் ஷரத்தாகும். இந்த நிறுவனம் 2014 முதல் திட்டப்பணிகளை துவக்கி அதற்காக குறிப்பிட்ட தொகையை நிதியாகப் பெற்றது. அதற்கு உண்டான கட்டுமானப்பணிகள் முடித்த நிலையில் ஏற்பட்ட சர்சைகளால், 2017க்கு பின்னர் அந்த நிறுவனம் கட்டுமானம் பணிகளைத் தொடரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மின் நிலையம் அமைக்கும் பணிகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டன.

பிறகு கட்டுமானப் பணிகளைத் தொடர, வேறு ஒரு நிறுவனத்திற்கு கிடப்பில் உள்ள பணிகளை முடிக்க கூடுதல் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.  இந்த காலகட்டத்திலேயே மேற்குவங்க மாநிலத்தில் 660 மெகாவாட் மின் நிலையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறையின் புதிய உத்தரவின் படியும், கழிவுகளை அகற்ற புதிய கட்டமைப்பு உள்ளிட்டு ₹3,600 கோடி செலவில் மின் நிலையம் அமைக்க மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்திற்கு 31.12.2018ல் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இதை உற்று நோக்கும் போது தமிழக அரசு மக்களின் வரிப்பணத்தை எவ்வாறு தமிழக அரசின் கஜானாவில் இருந்து கொள்ளை அடிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது. இந்நிலையில் சம்மந்தப்பட்ட திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 5 ஆண்டு கால அவகாசம்  வழங்கியிருந்தது.

 

அது விரைவில் முடிவடையவுள்ளதாக தெரிகிறது. இந்த அவகாசத்தை நீடிக்க வேண்டும் எனக்கூறி மின்வாரிய அதிகாரிகள் முயற்சி செய்தனர். ஆனால் இதற்கு சுற்றுச்சூழல்துறை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் புதிய மின்திட்டத்திற்கு அனுமதி கோருவது போல் அனுமதி கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஏராளமான பைல்கள் தயாரிக்க வேண்டும் என்பதால் அதற்கு நீண்ட நாட்கள் ஆகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு தயாரித்த பிறகு மீண்டும் சுற்றுச்சூழல்துறையிடம் அனுமதிகோர வேண்டும். அதை அவர்கள் பரிசீலனைசெய்து அனுமதி வழங்குவதா அல்லது வேண்டாமா என முடிவு செய்வார்கள். இதுபோன்று தொடர்ந்து சம்மந்தப்பட்ட திட்டம் சர்ச்சைகளில் சிக்கி வருவதால், திட்டம் எப்போது செயல்படுத்தப்படும். மேலும் அங்கிருந்து எப்போது மின்விநியோகம் செய்யப்படும் என்பது புரியாத புதிராக இருக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: