காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாடுவதில் சிக்கல்: இருபிரிவினர் இடையே கடும் வாக்குவாதம்

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 8ம் நாள் பிரம்மோற்சவத்தில் திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாடுவதில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே சிக்கல் ஏற்பட்டது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நீண்ட காலமாக நீருபூத்த நெருப்பாக வடகலை - தென்கலை பிரச்னை இருந்து வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் வைகாசி பிரமோற்சவத்தில் உள்ளூர் பக்தர்கள், உபயதாரர்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து 10 நாள் உற்சவத்தில்  கலந்துகொள்வது வழக்கம்.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில், பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான நேற்று முன்தினம் மாலை குதிரை வாகனத்தில் வரதராஜ பெருமாள் வீதியுலா வந்தார். அப்போது, வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் பாசுரங்களை  பாடிக்கொண்டு பின் தொடர்ந்து சென்றனர்.பெருமாள் வீதியுலா திருக்கச்சி நம்பித்தெரு அருகே சென்று கொண்டிருந்தபோது, தென்கலை மற்றும் வடகலை பிரிவினர் இடையே பாசுரங்களை பாடிக்கொண்டு செல்வதில் தகராறு ஏற்பட்டு, கடும் வாக்குவாதம் நடந்தது. இதனால், அங்கு  பரபரப்பு நிலவியது.இதை பார்த்ததும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், இரு தரப்பையும் சமாதானம் செய்தனர். இதையடுத்து தொடர்ந்து வீதியுலா நடந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன், தென்கலை பிரிவினர் நாலாயிர திவ்விய பிரபந்தம் பாட வடகலை பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து,  திருவடி கோயில் முதல் வாகன மண்டபம் வரை தென்கலை பிரிவினர் பாசுரங்கள் பாடக்கூடாது என கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டதாக தெரிகிறது.இதனைத் தொடர்ந்து தென்கலை பிரிவினருக்கு ஆதரவாக வில்லிபுத்தூர் ஜீயர் மணவாள மாமுனிகள் சடகோப ராமானுஜ ஜீயர், கலெக்டர் பொன்னையாவை சந்தித்து உத்தரவை தளர்த்த கோரிக்கை விடுத்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தென்கலை - வடகலை பிரிவினர் இடையே பிரச்னை எழுந்துள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு 5 ம் நாள் உற்சவத்தின்போது பிரச்னை எழுந்ததால் வரதராஜ பெருமாளை தொடர்ந்து முதலில்  தென்கலை பிரிவினர் தமிழில் வேத பாராயணங்களை பாடி சென்றனர்.அவர்களை தொடர்ந்து வடகலை பிரிவினர் சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் ஓத, பல்லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: