தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு

புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன்  ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜ மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கூட்டம்  டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு நாடாளுமன்ற மத்திய அரங்கில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடி, பிரதமராக மீண்டும் ஒரு  மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் பதிவிக்கு நரேந்திர மோடியை முதலில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முன்மொழிந்தார். தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் , சிவசேனா தலைவர் உத்தல் தாக்கரே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் முன்மொழிந்தனர்.

முன்னதாக இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜ மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் அனைவரும் இன்று  மாலைக்குள் டெல்லி வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து பாஜக கூட்டத்தில் கூட்டணி கட்சிகளான, முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரக்குமார், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், சமத்துவ மக்கள் கட்சி  தலைவர் சரத்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்தவுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து ஆட்சியமைப்பதற்கு பிரதமர் மோடி உரிமை கோருவார். அதன்பின், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு போன்ற நடைமுறைகள் குறித்த தேதி உறுதிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பிரதமர் மோடி வரும் 29ம் தேதி முதல் 31ம் தேதிக்குள் பதவியேற்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: