விவசாய நிலங்களில் உள்ள டாஸ்மாக் கடை கணக்கெடுப்பு நிறைவு

சென்னை: தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் விவரங்களை டாஸ்மாக் தலைமை அலுவலகத்திற்கு புகைப்படம் எடுத்து அனுப்பும் பணி முடிவடைந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈரோடு மாவட்டத்தை சேரந்த நல்லசாமி நாச்சிமுத்து என்பவர், எங்கள் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் தமிழக அரசு டாஸ்மாக் கடையை திறந்துள்ளது. விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, கடையை அகற்றுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.  இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான கடையை விவசாய நிலத்தில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும். இதேபோல், தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகள் எத்தனை என்பது குறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் வரும் 20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்தநிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து தமிழகத்தில் விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளதா என்பது குறித்த விவரத்தையும், டாஸ்மாக் கடை அமைந்துள்ள இடத்தின் புகைப்படத்தையும் அனுப்ப வேண்டும் என டாஸ்மாக் தலைமை அலுவலகம் கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டது. இதேபோல், அந்தந்த மாவட்ட மேலாளார்கள் கடை ஊழியர்களிடம் விவரங்களை வாங்கி நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது. இதற்கான பணிகள் கடந்த 14ம் தேதி தொடங்கியது. தற்போது புகைப்படம் மற்றும் விவரங்கள் அனுப்பும் பணி முடிவடைந்துள்ளது. மேலும், மாவட்ட மேலாளர்கள் கட்டிடத்தின் விவரம், கடை எண் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விவரம் ஆகியவற்றை தயார் செய்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளதாகவும்  டாஸ்மாக் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: