கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லைக்கு 377 கன அடி மட்டுமே நீர்வரத்து: பொதுப்பணித்துறை தகவல்

சென்னை: கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லைக்கு 377 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கண்டலேறு அணையில் இருந்து தெலுங்கு கங்கா திட்டத்தின் கீழ் ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டிஎம்சி தர வேண்டும். குறிப்பாக, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் தர வேண்டும். முதல் தவணை காலகட்டத்தில் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு 8 டிஎம்சிக்கு 1.6 டிஎம்சி மட்டுமே தந்தது. இந்த நிலையில் ஜனவரி 1ம் தேதி முதல் இரண்டாவது தவணைக்காலம் தொடங்கியது. இந்த காலகட்டத்தில் 4 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும்.  இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் ஒப்பந்தப்படி கிருஷ்ணா நீர் தர வேண்டும் என்று கடிதம் மூலமாகவும், தொலைப்பேசி வாயிலாகவும் தமிழக பொதுப்பணித்துறை வலியுறுத்தியது. ஆனால், ஆந்திர அரசு பதில் அளிக்காமல் மவுனம் காத்தது.  இந்த நிலையில், கடந்த 5ம் தேதி பொதுப்பணித்துறை அரசு செயலாளர் பிரபாகர் தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் ஆந்திரா நீர்வளத்துறை தலைமை பொறியாளரை சந்தித்து பேசினார். அப்போது 4 டிஎம்சி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையேற்று கண்டலேறு அணையில் இருந்து கடந்த 6ம் தேதி காலை 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 10ம் தேதி 4.20 மணியளவில் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜூரோ பாயிண்டை வந்தடைந்தது. 10 கன அடி வரை தமிழக எல்லைக்கு வந்த நிலையில், இந்த தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து 500 கன அடி வீதம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 11ம் தேதி வரை 54 கன அடி வீதமும், 12ம் தேதி 188 கன அடி மட்டுமே தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 15ம் தேதி முதல் 330 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், கூடுதலாக தண்ணீர் திறந்து விடக்கோரி நீர்வளத்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் ஜெயராமன் ஆந்திர தலைமை பொறியாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த நிலையில் நேற்று வரை 377 கன அடி வீதம் மட்டுமே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது வரை 109 மில்லியன் கன அடி வந்து சேர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் 500 கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: