சென்னையில் இன்றும், நாளையும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான் நாடுகள் பங்கேற்பு

சென்னை: சென்னையில் இன்றும், நாளையும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன. தமிழகத்தில் 2015ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இதையடுத்து, 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்றும், நாளையும் சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கிறது. இன்று காலை 10 மணிக்கு தொடக்க விழா நடக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டையும், கண்காட்சியையும் தொடங்கி வைக்கிறார். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, `தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை-2019’ஐ வெளியிட்டு பேசுகிறார்.

நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தொழில் துறை அமைச்சர்  எம்.சி.சம்பத், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தொழில் துறை செயலாளர்  ஞானதேசிகன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள். இதைத்தொடர்ந்து ஆட்டோமொபைல் துறை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, விண்வெளி மற்றும் ராணுவ  தளவாட தொழிற்சாலைகள் குறித்து முதலீட்டாளர்கள் கருத்தரங்கு நடக்கிறது. 24ம் தேதி (நாளை) மாலை 3 மணிக்கு நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். சிறப்பு விருந்தினராக மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார்.

மாநாட்டின் நிறைவாக, தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்த நிறுவனங்களுடன் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும். அப்போது, தமிழகத்தில் புதிதாக எவ்வளவு கோடி ரூபாய்க்கு தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பதை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். சென்னையில் இரண்டு நாள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க இந்திய தொழிலதிபர்கள் திரளாக பங்கேற்கிறார்கள். மேலும், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ஒட்டி சென்னை முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள தொழிற்கொள்கைகளை விளக்கும் வகையில் சென்னையின் முக்கிய சாலைகளில் விளம்பரம் மற்றும் வீடியோ காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: