கடந்த ஆண்டு தமிழகத்தில் சாலை விபத்துகளால் 12,216 பேர் இறந்துள்ளனர் - போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு மட்டும் 63,920 சாலை விபத்துக்களால் 12,216 இறந்துள்ளனர் என்று போக்குவரத்து துறை அமைச்சர் கூறினார். சென்னை, சேத்துப்பட்டு எம்சிசி மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு மன்றத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். விழாவில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:

தமிழகத்தில் அதிகமான சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. கடந்த 2018ம் ஆண்டு மட்டும் 63,920 சாலை விபத்துக்கள் மற்றும் 12,216 உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளன. நாள்தோறும் ஏறக்குறைய 175 சாலை விபத்துக்கள் ஏற்பட்டு, அதன்மூலம் 33 பேர் தினசரி உயிர் இழக்க நேரிடுகிறது. எனவே பள்ளி மாணவ - மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது. இவர்கள், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை தாங்கள் மட்டும் பின்பற்றாமல், தங்களுக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சுற்றத்தாரிடம் காலப்போக்கில் கொண்டு செல்வார்கள். எனவே, பள்ளிகளில் சாலை பாதுகாப்பு மன்றம் உருவாக்குதல் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.அதனால், தமிழகத்தில் உள்ள 7,870 அரசு பள்ளிகள், அரசு சார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சாலை பாதுகாப்பு மன்றம் உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை பள்ளியில் பயிலும் இளம் சிறார்களிடையே ஏற்படுத்த, அவர்களுக்கு  சாலை பாதுகாப்பு மற்றும் அடிப்படை சாலை விதிகளை பின்பற்ற பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.விழாவில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், சாலை பாதுகாப்பு ஆணையர் சமயமூர்த்தி, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வரமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: