சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு : 7 அடி உயர கண்ணாடி கதவு உடைந்து விழுந்து 84-வது விபத்து

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 7 அடி உயரமுள்ள கண்ணாடி கதவு திடீரென உடைந்து விழுந்து நொறுங்கியது. இதை பார்த்த பாதுகாப்பு படை வீரர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். இது, விமான நிலையத்தில் தொடரும் 84வது விபத்தாகும்.சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையம் சுமார் ₹2000 கோடி செலவில் நவீன முறையில் கண்ணாடி மாளிகை போல் வடிவமைக்கப்பட்டு 2013 ஜனவரியில் திறக்கப்பட்டது. அதைதொடர்ந்து, அதே ஆண்டு மே மாதம் உள்நாட்டு முனையம் மற்றும் சர்வதேச முனையத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன.

கண்ணாடி கதவுகள், சுவரில் பதிக்கப்பட்ட கண்ணாடிகள் உடைந்து நொறுங்குவது, மேற்கூரைகள் சரிந்து விழுவது, சுவரில் பதிக்கப்பட்டுள்ள சலவை கற்கள் பெயர்ந்து விழுவது என தொடர்ந்து இதுவரை 83 விபத்துகள் நடந்துள்ளன. அதில், 14 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 84வது விபத்து நேற்று அதிகாலை 1.25 மணிக்கு நடந்தது.

சென்னை உள்நாட்டு முனையத்தின் பயணிகள் புறப்பாடு பகுதியில், பயணிகள் அனைத்து சோதனைகளையும் முடித்துக்கொண்டு, விமானத்தில் ஏறுவதற்காக முதல் தளத்தில் செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த 7அடி உயரம், 4 அடி அகலம் கொண்ட பெரிய கண்ணாடி கதவு திடீரென உடைந்து விழுந்து நொறுங்கியது.அப்போது, அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக பயணிகள் யாரும் செல்லவில்லை. நள்ளிரவு நேரம் என்பதால், உள்நாட்டு முனையத்தில் பயணிகள் கூட்டம் இல்லாமல் இருந்தது. அதிகாலை 1.15 மணிக்கு டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றுவிட்டது.

அதன்பின்பு, அடுத்த விமானம் அதிகாலை 3.30 மணிக்கு புனேவுக்கு புறப்பட்டு செல்லும். இந்த இடைப்பட்ட நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் பயணிகள் தப்பினர். திடீரென கண்ணாடி கதவு உடைந்து விழுந்ததில், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதை பார்த்ததும், அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள், விமான நிலைய ஊழியர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர்.இதையறிந்ததும், உடனடியாக விமான நிலைய அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். பின்னர், விமான நிலைய துப்புரவு ஊழியர்களை வரவழைத்து அவசர அவசரமாக கண்ணாடி துகள்களை அகற்றினர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கண்ணாடி கதவு தானாக உடையவில்லை. பேட்டரி கார் ஒன்று, அவ்வழியாக சென்றுள்ளது. அப்போது கண்ணாடி கதவில் உரசியதால் உடைந்து விழுந்ததாக தெரிகிறது. இதுபற்றி நாங்கள் பேட்டரி கார் ஓட்டிய டிரைவரிடம் விசாரணை நடத்துவோம் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: