குளிர் விட்டு போய்விட்டது; கோடிகளில் சம்பளம் என விமர்சனம் நாங்கள் உழைத்து சம்பாதித்து முறையாக வரி செலுத்துகிறோம்: ரஜினிகாந்த் கண்டனம்

சென்னை: நடிகர்களை விமர்சித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்  ஜெயக்குமாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.சென்னையில் தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு வெளியே நிருபர்களை நேற்று சந்தித்தார் ரஜினிகாந்த். அப்போது அவர் கூறியதாவது:சர்கார்  படத்துக்கு எதிராக ஆளும் கட்சியினர் பேனர்கள் உடைத்தது, போஸ்டர்கள்  கிழித்தது கண்டிக்கத்தக்கது. வன்முறை எந்த ரூபத்தில் வந்தாலும் அதை  கடுமையாக கண்டிக்கிறேன். மாற்று கருத்து இருந்தால் அது தொடர்பாக  பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எடுத்ததுமே தியேட்டர்களை உடைப்பது,  பேனர்களை உடைப்பது, படத்தை நிறுத்துவது சரி கிடையாது. இலவசங்கள் தேவைதான்.  ஆனால் யாருக்கு, எதற்கு தருகிறோம் என்பது முக்கியம். அவை ஓட்டுக்காக  மட்டும் கொடுத்தால் சரி கிடையாது.

ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு  குளிர் விட்டுப்போயுள்ளது  என அமைச்சர் கூறியுள்ளார். அவர் பதவியில்  இருக்கிறார்.  கருத்து சொல்லும்போது யாரையும் புண்படுத்தாமல் சொன்னால்  நன்றாக இருக்கும். பதிலுக்கு நான் அதே போன்ற கேள்வியை கேட்டால் நன்றாக  இருக்குமா? நடிகர்கள் கோடிகளில் சம்பாதிக்கிறார்கள்.

சொகுசு கார்களில் வலம்  வருகிறார்கள் என முதல்வர் கூறியதாக கேட்கிறீர்கள். நாங்கள் உழைத்து  சம்பாதித்து முறையாக வரியும் செலுத்துகிறோம். இவர்கள் யார் இதை சொல்வதற்கு?ராஜிவ் காந்தி  கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் பற்றி  ரஜினிகாந்த்துக்கு தெரியாது  என்று மாயையை ஏற்படுத்தியுள்ளனர். ஒரு விஷயம் தெரியும்  என்றால் தெரியும்  என்பேன், தெரியாது என்றால் தெரியாது என்பேன். இதில்  வெட்கம் இல்லை.  திடீரென 7 பேர் என கூறியதால் யார் அவர்கள் என கேட்டேன்.

அந்த 7 பேரை  தெரியாத அளவுக்கு இந்த ரஜினிகாந்த் முட்டாள் இல்லை. பரோலில் வந்தபோது  பேரறிவாளனிடம் 10 நிமிடம் போனில் பேசி ஆறுதல் கூறியவன்தான்  இந்த  ரஜினிகாந்த். இந்த வழக்கு பல நீதிமன்றங்களுக்கு பல கட்டங்களில் சென்று  வந்துள்ளது. இப்போது அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின்  கோரிக்கை கவர்னரிடம் அளிக்கப்பட்டுள்ளது. கவர்னர் இதில் முடிவு எடுக்க  வேண்டும். 27  ஆண்டுகள் அவர்கள் தண்டனை அனுபவித்து விட்டனர். போதும்.  மனிதாபிமான  அடிப்படையில் அவர்களை விடுதலை செய்வதுதான் நல்லது. இது எனது  கருத்து.

எல்லா கட்சிகளும் பாஜவை தோற்கடிக்க ஒன்றாக  சேர்ந்துள்ளார்களே, அந்த  கட்சி அவ்வளவு ஆபத்தான கட்சியா என்று நிருபர்கள்  கேட்டனர். எதிர்க்கட்சிகள் அப்படி  நினைத்து கொண்டுள்ளார்கள். அப்படியானால்  பாஜக அவர்களுக்கு ஆபத்தான  கட்சிதானே என்றுதான் சொன்னேன். இப்போது  எல்லாமே வீடியோவாக எடுக்கிறார்கள். எனவே திரித்து செய்தி   வெளியிடாதீர்கள். 10 பேர்  எதிர்த்துக்கொண்டு ஒருவருக்கு எதிராக யுத்தத்திற்கு சென்றால்,  யார்  பலசாலி? அந்த 10 பேரா, அல்லது ஒருவரா? 10 பேர் ஒன்றாக சேர்வதால் அந்த 10  பேர்தான் பலசாலி என நீங்கள் (நிருபர்கள்) சொல்கிறீர்கள். ஆனால் ஒருவரை  பத்து பேர் சேர்ந்து எதிர்க்கிறார்கள் என்றால் அந்த ஒருவர் எவ்வளவு  பலசாலியாக இருக்க வேண்டும்? இதைவிட தெளிவாக நான் சொல்ல முடியாது.

பொதுவாக பாஜ  ஆபத்தான கட்சியா இல்லையா என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். இதில் எனது  கருத்தை இப்போது சொல்ல முடியாது. நான் முழுமையாக இன்னும் அரசியலில்  இறங்கவில்லை.  அன்றாட நிகழ்வுகளுக்கு நான் கருத்து கூற முடியாது. அதை  என்னிடம்  எதிர்பார்க்காதீர்கள். இதே போல் சொல்லி கொண்டிருந்தால் மக்கள்   கடுப்பாகிவிடுவார்கள். அதே சமயம் எனது கட்சி துவங்குவதற்கான ஆயத்த பணிகள் அன்றாடம்  நடந்துகொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: