வங்கக்கடலில் உருவான 'கஜா'புயலால் வடதமிழகம் மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் உருவான கஜா புயலால் வடதமிழகம் மற்றும் ஆந்திரா கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியுள்ளது. இதனால் நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த கஜா புயலானது வடதமிழகம்-ஆந்திரா இடையே நவ.15-ம் தேதி முற்பகலில் கரையை கடக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் கடல் பகுதியில் நேற்று முன்தினம் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது தற்போது 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து சென்னைக்கு வடகிழக்கே 900 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

புயல் சின்னத்தை அடுத்து அந்தமான் கடல் பகுதிக்கு செல்லவேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. புயல் உருவானதால் தற்போது அந்தமான் தீவுகளில் மழை பெய்து வருகிறது. மேலும் இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது 13-ம் தேதி புயலாக வலுவடையும் என்றும் அதைதொடர்ந்து இந்த கஜா புயலானது மேற்கு, தென்மேற்கு திசையை நோக்கி நகரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 14-ம் தேதி மாலை முதல் வட கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும், ஓரிரு  இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். புயல் உருவாகும் போது 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் 12-ம் தேதி இரவுக்குள் கரை திரும்புமாறு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: