அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் நகை, சிலை செய்வதில் முறைகேடு செய்தால் 5 ஆண்டு சிறை தண்டனை: புதிய விதிமுறைகள் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் நகைகள், சிலைகள் செய்வதில் முறைகேடு செய்தால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிப்பது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன், துறை தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்து 645 கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் அடக்கம். இந்த கோயில்களுக்கு சொந்தமாக விலை மதிப்புமிக்க ஏராளமான தங்கம், வெள்ளி நகைகள் உள்ளன. மேலும், இந்த கோயில்களுக்கு பொதுமக்கள் தொடர்ந்து தானமாக தங்கம், வெள்ளி நகைகளை வழங்கி வருகின்றனர்.

இவ்வாறு கோயில்களுக்கு தானமாக வரும் நகைகள் மற்றும் பழைய நகைகளை உருக்கி சிலையோ, கிரீடமோ செய்யப்படுகிறது. இல்லையெனில், தங்கத் தேர் செய்யவோ, தங்கம் பூசிய தகடுகள் பதிப்பதற்கோ அல்லது வேறு மற்ற பயன்பாட்டிற்கு அந்த உருக்கிய நகைகள் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு நகைகளை உருக்கும் போது, சில நேரங்களில் முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சமீபத்தில் கூட பழனி முருகன், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்களில் சிலை செய்ததில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது.

புதிதாக செய்யப்பட்ட இந்த சிலை செய்ய அதிகளவில் தங்கம் பெறப்பட்டும், செம்பு அதிகமாக கலக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நகை, சிலை செய்ததில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தவறு இருந்தால் கூட அவர்கள் தப்பித்து கொள்கின்றனர். அதாவது சிலை, நகை செய்தாலும் எவ்வளவு தங்கம், எவ்வளவு செம்பு சேர்க்க வேண்டும் என்ற விதிமுறைகள் இல்லாததே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து இனி வருங்காலங்களில் கோயில் நகை, சிலை செய்ததில் முறைகேட்டை தடுக்க புதிய விதிமுறையை வகுக்க அறநிலையத்துறை அப்போதைய கமிஷனர் ஜெயா உத்தரவிட்டார். அதன்பேரில், நகை, சிலை செய்வதற்கு புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 50 கிலோ ஐம்பொன் சிலை செய்வதாக இருந்தால், அதில், எவ்வளவு தங்கம், செம்பு, ஈயம், வெள்ளி சேர்க்க வேண்டும் என்பது குறித்து விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

அதே போன்று 25 கிலோ தங்கச் சிலை செய்வதாக இருந்தால், அதில், எவ்வளவு செம்பு சேர்க்க வேண்டும் என்பது குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை மீறி நகை, சிலை செய்யப்பட்டால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குவது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் அறநிலையத்துறை தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் எடுக்கப்படும் முடிவை தொடர்ந்து புதிய விதிமுறை தொடர்பான அறிக்கை அரசிடம் அளிக்கப்படுகிறது. இதற்கு, அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் அந்த விதிமுறை அரசாணையாக வெளியிடப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: