சுதேசி தர்ஷன் திட்டத்தின் கீழ் கடற்கரையை மேம்படுத்த ரூ20 கோடி ஒதுக்கீடு: டிசம்பருக்குள் பணிகளை முடிக்க திட்டம்

சென்னை: சென்னையில் உள்ள கடற்கரைகளை மேம்படுத்த சுதேசி தர்ஷன் திட்டத்தின் கீழ் ரூ20 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை வரும் டிசம்பருக்குள் முடிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை மேம்படுத்த சுதேசி தர்ஷன் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டமானது  மத்திய அரசின் சுற்றுலாத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதற்காக இதுவரை ரூ6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மெரினா, பெசன்ட் நகர், மாமல்லபுரம், ராமேஸ்வரம், மணப்பாடு, கன்னியாகுமரி, தேர்குறிச்சி, மணக்குடி உள்ளிட்ட கடற்கரைகளை மேம்படுத்த ரூ99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் உள்ள மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளை மேம்படுத்த ரூ20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த பணிகள் அனைத்தையும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:  சுதேசி தர்ஷன் திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் ஆண், பெண், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோருக்கான 10 கழிவறைகள், சர்வீஸ் சாலையில் அமர்ந்து கொண்டு கடற்கரையை பார்க்கும் வகையிலான 20 இருக்கைகள், குடிநீர் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சர்வீஸ் சாலைக்கும் மணல் பரப்பிற்கும் இடையே உள்ள தடுப்பு சுவர் புதுப்பிக்கப்ட்டு பொது மக்கள் அமரும் வகையில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுவருகின்றன. நிழற்குடைகள், சோலார் விளக்குள், குழந்தைகள் விளையாட்டு திடல் உள்ளிவைகளும் அமைக்கப்பட உள்ளன. இந்த பணிகள் அனைத்தும் 80 சதவீதம் முடிவடைந்துவிட்டன. வரும் டிசம்பர் இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

குறிப்பாக மாற்றுதிறனாளிகள் கடற்கரை வரை செல்வதற்காக நடை பாதைகள் அமைக்கப்படவுள்ளன. மெரினா கடற்கரையில் 500 மீ நீளத்திற்கும், பெசன்ட் நகர் கடற்கரையில் 160 மீ நீளத்திற்கு இந்தப் பாதைகள் அமைக்கப்படவுள்ளது. இதற்காக கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இதற்கான பணிகள் தொடங்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: