இந்தி பட வாய்ப்பை புறக்கணித்தேன்: விஜய் தேவரகொண்டா

ஐதராபாத்: இந்தி பட வாய்ப்பை புறக்கணித்தேன் என நடிகர் விஜய் தேவரகொண்டா கூறினார். புரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்துள்ள லைகர் படம் வரும் 25ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் விஜய் தேவரகொண்டா கூறியது: அர்ஜுன் ரெட்டி படம் வெளியானதும் எனக்கு இந்தி பட வாய்ப்பு வந்தது. கரண் ஜோஹர், பாலிவுட்டுக்கு வரும்படி அழைத்தார். ஆனால் அதை நான் ஏற்கவில்லை. அர்ஜுன் ரெட்டி ஒரு படத்தால் கிடைத்த பெயரை வைத்து, இந்திக்கு செல்வது சரியாக இருக்காது என நினைத்தேன். அந்த சமயத்தில் பாலிவுட்டில் பலருக்கு என்னை தெரியாமல் இருந்தது. அதன் பிறகுதான் என்னை பாலிவுட் ரசிகர்களுக்கு தெரிந்தது. இப்போது லைகர் படம் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது.

இப்படியொரு படம் மூலம்தான் இந்தி சினிமாவுக்கு நுழைய விரும்பினேன். அதாவது தெலுங்கு சினிமாவையும் தென்னிந்திய சினிமாவையும் விட்டு விடக் கூடாது. அதே சமயம், இந்தியிலும் தடம் பதிக்க வேண்டும் என யோசித்தேன். அதற்கு தகுந்த படமாக லைகர் அமைந்தது. அதை கரண் ஜோஹரே தயாரித்திருப்பதும் சிறப்பு. இந்த படத்தில் வலுவான ஃபைட்டராக நடிக்கிறேன். அதே சமயத்தில் மற்றவர்களால் கிண்டலுக்கு ஆளாகும் திக்குவாயாகவும் நடிக்கிறேன். இது ஒரு வித்தியாசமான வேடம்தான். 10 பேரை தனியாக அடித்துபோடும் ஒருவனால், தனது காதலியிடம் ஐ லவ் யூ என சொல்ல திணறும் கேரக்டர். இதில் எனக்கு பக்கபலமாக இருப்பது எனது அம்மாதான். வழக்கமான சென்டிமென்ட் அம்மாவாக இல்லாமல், ரவுடியிசம் செய்யும் அம்மாவாக அந்த வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கிறார். குத்துச் சண்டை வீரர் மைக் டைசனுடன் நடித்திருப்பதும் பெருமையான விஷயமாக பார்க்கிறேன். இவ்வாறு விஜய் தேவரகொண்டா கூறினார்.

Related Stories: