×

ஒன்றிய அரசு ₹6,431 கோடி செலவில் அமைத்த விழுப்புரம்-நாகை சாலை தரமில்லாததால் மீண்டும் உடைத்து பேட்ச் ஒர்க்

*அச்சத்துடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்

விழுப்புரம் : விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே ஒன்றிய அரசு ₹6,431 கோடி செலவில் அமைத்த சாலை தரம் இல்லாததால் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மீண்டும், மீண்டும் சாலையை உடைத்து பேட்ச் ஒர்க் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் இந்த சாலையில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது.விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் வழியாக நாகப்பட்டினம் வரை 194 கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற, சுமார் ரூ.6,431 கோடி திட்ட மதிப்பீட்டுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. இந்த 4 வழிச்சாலை திட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் இருந்து தொடங்குகிறது.

இந்த திட்டம் விழுப்புரத்தில் 16 கிராமங்கள், கடலூரில் 61 கிராமங்கள், நாகை மாவட்டத்தில் 43 கிராமங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 14 கிராமங்கள் என மொத்தமாக 134 கிராமங்கள் வழியாக கடக்கிறது. இந்நிலையில் சாலை பணிகள் 90 சதவீதத்துக்கு மேல் முடிந்த நிலையில் வளவனூர், கண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

அதுவும் கண்டமங்கலத்தில் ஒரு பக்கத்திற்கு பணிகள் முடிந்து வாகனங்கள் இயங்கி வருகின்றன. இந்த மேம்பாலங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ள நிலையில், புதுச்சேரி மார்க்கம் செல்லும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் இச்சாலையில் பயணித்து வருகின்றன.

இதனிடையே பல இடங்களில் புதிதாக போடப்பட்ட சாலையில் திடீரென்று விரிசல் ஏற்பட்டது. ஒன்றிய அரசின் நிதியில் போடப்பட்ட சாலைகள் தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வந்தனர். இதில் குறிப்பாக விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம், கோலியனூர் உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்ட மேம்பாலங்கள் செல்லும் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சாலை பணிகளை ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், விரிசல் ஏற்பட்ட பகுதியில் மட்டும் பள்ளம் தோண்டிவிட்டு மீண்டும் பேட்ச் ஒர்க் போல் சாலையை சீரமைத்தன.

புதிதாக போடப்பட்ட சாலை பெரும்பாலான பகுதிகளில் இன்னும் பயன்பாட்டுக்கு வராத நிலையில் சாலையில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லியிலிருந்து நகாய் நிறுவன குழுவினர் நேரில் ஆய்வு செய்து குறைகளை சுட்டிக்காட்டி சரிசெய்ய அறிவுறுத்தினர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இச்சாலையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மீண்டும் விரிசல் ஏற்பட்டு வருகிறது.

விழுப்புரம் அருகே சாமிபேட்டை ரயில்வே மேம்பாலத்தில் மழைநீர் தேங்கி நின்ற இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். இதனை ஒப்பந்த நிறுவனம் மூடி மறைக்க சிமென்ட் கரைசலை ஊற்றி தற்காலிகமாக சரிசெய்துள்ளன. ஆனால் பாலத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யப்படவில்லை.

இதேபோல் ஜானகிபுரம் மேம்பாலம் பகுதியில் திடீரென்று விரிசல் ஏற்பட்டுள்ளதால் ஜேசிபி இயந்திரம் மூலம் அந்த சாலை உடைக்கப்பட்டு மீண்டும் பேட்ச் ஒர்க் பணிகள் நடைபெற்று வருகின்றன. பேட்ச் ஒர்க் பணிகளுக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. முழுமையாக பயன்பாட்டுக்கு வராத நிலையில் விழுப்புரம்- நாகை 4 வழிச்சாலையில் தற்போது 3 வது முறையாக பேட்ச் ஒர்க் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

The post ஒன்றிய அரசு ₹6,431 கோடி செலவில் அமைத்த விழுப்புரம்-நாகை சாலை தரமில்லாததால் மீண்டும் உடைத்து பேட்ச் ஒர்க் appeared first on Dinakaran.

Tags : EU government ,Viluppuram ,Nagapattinam ,Union Government ,Vilupuram- ,Nagai ,Dinakaran ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் பதிவான...