×

வாக்குச்சாவடி மையங்களில் பதிவான சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட மின்னணு ஆவணம் ஆய்வு செய்ய தடை: தேர்தல் விதியில் திருத்தம் கொண்டு வந்தது ஒன்றிய அரசு; வெளிப்படைத்தன்மையை நீக்குவதா? எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுடெல்லி: வாக்குப்பதிவின் போது, வாக்குச்சாவடி மையங்களில் பதிவான சிசிடிவி காட்சிகள், வேட்பாளர்களின் வீடியோ பதிவுகள் உள்ளிட்ட மின்னணு ஆவணங்களை பொது ஆய்வுக்கு வழங்குவதை தடுக்க தேர்தல் விதியில் ஒன்றிய அரசு திருத்தம் செய்துள்ளது. இந்த திருத்தத்தின்படி, எந்த மின்னணு ஆவணங்களையும் வேட்பாளர்கள் தவிர வேறு யாரும் நீதிமன்ற உத்தரவின்றி சரிபார்க்க முடியாது. சமீபத்தில் நடந்த அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அங்கு காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறியிருந்த நிலையில், தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

இதைத் தொடர்ந்து தேர்தலில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல்கள் நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடர்ந்தது. இதே போல, அரியானா மாநில தேர்தல் சந்தேகங்கள் குறித்து வழக்கறிஞர் ஒருவர் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தேர்தல் நடத்தை விதிகள் 93(2) பிரிவின் கீழ், வாக்குச்சாவடி மைய சிசிடிவி கேமரா பதிவு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த நிலையில், வாக்குச்சாவடி மையங்களில் பதிவான சிசிடிவி, வெப்காஸ்டிங் காட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் வீடியோ பதிவு போன்ற மின்னணு ஆவணங்களை பொது ஆய்வுக்கு உட்படுத்துவதை தடுக்கும் வகையில் தேர்தல் நடத்தை விதியில் ஒன்றிய அரசு திருத்தம் செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் ஒன்றிய சட்ட அமைச்சகம் நேற்று முன்தினம் இந்த திருத்தத்தை மேற்கொண்டதாக நேற்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி, தேர்தல் விதி 93ன் கீழ், அனைத்து காகித ஆவணங்கள் என்றிருப்பதுடன் ‘இந்த சட்டப்பிரிவில் குறிப்பிட்டுள்ள’ என்கிற வாக்கியத்தை சேர்த்துள்ளது.

இதன் மூலம் சட்டப்பிரிவில் குறிப்பிட்டுள்ள காகித ஆவணங்கள் மட்டுமே என தெளிவுபடுத்தி இருப்பதாக ஒன்றிய அரசு கூறி உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் சட்டத்தில், ஆவணங்கள் என்பதை பொறுத்த வரையில் வேட்புமனு படிவம், தேர்தல் முகவர்கள் நியமனம், முடிவுகள் மற்றும் தேர்தல் கணக்கு அறிக்கைகள் போன்றவை மட்டுமே இடம் பெற்றுள்ளன. அதில், சிசிடிவி உள்ளிட்ட மின்னணு ஆவணங்கள் எதுவும் தனியாக குறிப்பிடப்படவில்லை. எனவே அனைத்து ஆவணங்கள் என்கிற போது, காகித ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆவணங்கள் இரண்டும் வருமா என்பதில் குழப்பம் ஏற்படுவதாகவும், இந்த தெளிவின்மையை போக்கும் வகையில் ஒன்றிய சட்ட அமைச்சகம் இத்தகைய திருத்தத்தை மேற்கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், அனைத்து மின்னணு ஆவணங்கள் வழக்கம் போல், சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு தரப்படும் என்றும், மற்றவர்கள் பெற நீதிமன்றத்தை அணுகி பெறலாம் என்றும் சட்ட அமைச்சக அதிகாரிகள் கூறி உள்ளனர். இதன் மூலம், வாக்குச்சாவடி மைய சிசிடிவி கேமரா பதிவுகள் உள்ளிட்ட மின்னணு ஆவணங்களை யாரும் எளிதில் பார்வையிடுவது தடுக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை நீக்கும் செயல் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அரசு கூறும் காரணங்கள்
* வாக்குச்சாவடி மையங்களில் பதிவாகும் சிசிடிவி காட்சிகளை வெளியிடுவதன் மூலம் வாக்காளர்களின் ரகசியம் பாதிக்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் மூலம் சிசிடிவி காட்சிப் பதிவுகள் போலியாக மாற்றப்படுகின்றன.
* இந்த திருத்தத்தின் மூலம், சட்ட விதியில் குறிப்பிட்பட்டபடி அனைத்து காகித ஆவணங்கள் மட்டும் பொது ஆய்வுக்கு வைக்கப்படும். விதியில் இல்லாத ஆவணங்கள் பொது ஆய்வுக்கு அனுமதிக்கப்படாது.
* பல்வேறு நீதிமன்ற வழக்குகள் காரணத்தால் இந்த திருத்தம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

* வழக்கு தொடருவோம்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் தள பதிவில், ‘‘இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து உடனடியாக வழக்கு தொடருவோம். தேர்தல் ஆணையம் ஏன் வெளிப்படைத்தன்மைக்கு பயப்படுகிறது? ஊழல் மற்றும் நெறிமுறையற்ற நடவடிக்கைகளை அமல்படுத்தவும், அகற்றவும் வெளிப்படைத்தன்மை முக்கியம்’’ என்றார்.

The post வாக்குச்சாவடி மையங்களில் பதிவான சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட மின்னணு ஆவணம் ஆய்வு செய்ய தடை: தேர்தல் விதியில் திருத்தம் கொண்டு வந்தது ஒன்றிய அரசு; வெளிப்படைத்தன்மையை நீக்குவதா? எதிர்க்கட்சிகள் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : EU government ,NEW DELHI ,Dinakaran ,
× RELATED இந்திரா காந்தி...