ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் பொதுமக்களை விரட்டும் பன்றிகள்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஸ்ரீபெரும்புதூர் சுற்றி உள்ள பகுதியில் சிப்காட், சிட்கோ மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. இங்குள்ள தொழிற்சாலைகளில் பல்வேறு வெளிமாவட்ட, மாநில ஊழியர்கள் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் வாடகை வீட்டில் தங்கியுள்ளனர். இதனால், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் பன்றிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உட்பட்ட என்ஜிஓ குடியிருப்பு, செல்லபெருமாள் நகர், எம்ஜிஆர் நகர், சரளா நகர், பாலாஜி நகர், ராமாநுஜர் நகர், சந்தோஷ் நகர், சரோஜினி நகர் உள்பட பல பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட பன்றிகள் சுற்றி திரிகின்றன. அவை,  3 மாதத்திற்கு ஒரு முறை 10 குட்டிகள் போடுகிறது. கடந்த 10 நாட்களாக இனபெருக்கம் செய்து பன்றி குட்டிகளுடன் குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிகின்றன. அதனை, அப்பகுதியில் இருந்து விரட்டினால், பொதுமக்களை கடிக்க பாய்கிறது. இதனால் மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். மேலும், குடியிருப்பு அருகே உள்ள குப்பை தொட்டிகளை, பன்றிகள் கூட்டமாக கிளறுவதால், நகரம் முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தற்போது பெய்து வரும் மழையில், குப்பைகளில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்குன்குன்யா உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. சில நேரங்களில், பன்றிகள் கூட்டமாக, குடியிருப்புகளுக்குள் நுழைந்து வீட்டு உபயோகப் பொருள்கள், உணவுப் பொருட்களை தின்று நாசம் செய்கின்றன. இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதோடு, பொதுமக்கள் கடுமையாக பதிக்கப்படுகின்றனர். எனவே குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் பன்றிகளை அப்புறபடுத்த பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் பொதுமக்களை விரட்டும் பன்றிகள் appeared first on Dinakaran.

Related Stories: