எத்தினஹொளே உள்ளிட்ட திட்டங்கள் தேசிய திட்டமாக அறிவிக்காதது ஏன்?..மஜத எம்எல்ஏ சிவலிங்கேகவுடா கேள்வி

பேரவையில் பட்ஜெட் மீது மஜத எம்எல்ஏ சிவலிங்கே கவுடா பேசியதாவது: மத்திய அரசு கஜானாவுக்கு நமது கர்நாடக மாநிலத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி சென்றுள்ளது. பல்வேறு வரிகள் மூலமாக அளித்த இந்த நிதியில் இருந்து நமது மாநிலத்திற்கு 15வது நிதி ஆயோக் உள்ளிட்ட பிற வகையின் மூலமாக ரூ.40 ஆயிரம் மட்டும் கிடைக்கிறது.  நமது மக்கள் செலுத்தும் வரியை பயன்படுத்தி குஜராத் மாநிலத்தில் ரூ.33 ஆயிரம் கோடி செலவில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் வெவ்வேறு மாநிலத்தில் நமது மக்களின் வரிப்பணம் செலவிடப்படுகிறது. அதே நேரம் எத்தினஹொளே உள்ளிட்ட திட்டங்கள் அடிக்கல் நாட்டப்பட்டு பணி தொடங்கப்பட்டுள்ளதே தவிர இதுவரை இத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

ரூ.12500 கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பதால் இப்போது ரூ.25 ஆயிரமாக அது உயர்ந்துள்ளது. கர்நாடக மாநில பாஜ எம்பிகள் 25 பேர் என்ன செய்கிறார்கள்? மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால்  நமது மாநிலத்திற்கு நிதி கொட்டோ கொட்டோ என கொட்டும் என பிரசாரம் செய்யப்பட்டது. மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைக்காத நிலையில் குடிநீர் திட்டங்களுக்கு விவசாயிகள் நிலம் அளித்த நிலையில் அதற்கு நிவாரணம் கிடைக்கவில்லை. தினந்தோறும் என்னுடைய வீட்டில் காண்டிராக்டர்கள் காத்து கிடக்கின்றனர். பட்ஜெட்டில் இதற்கு நிதி ஒதுக்கவில்லை என்பதால் எம்எல்ஏக்கள் வீட்டை விட்டு வெளியே தலைகாட்ட முடியவில்லை.  33 துறைகள் என்பதற்கு பதில்  6 மண்டலமாக பிரித்து முதல்வர் எடியூரப்பா நிதி ஒதுக்கியுள்ளார். ஏற்கனவே சம்பளம் உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட செலவுகளை சமாளிப்பதற்காக மாநில அரசு கடன் பெற்றுள்ளது.

ஒவ்வொரு துறையிலும் 50 சதவீதம், 70 சதவீதம் என பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் வரையறுக்கப்பட்ட செலவினங்கள் தலைக்கு மேல் சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையே வருகிற 2022 ஜூலை மாதத்துடன் ஜிஎஸ்டி இழப்பு தொகையை ரத்து செய்துவிடும். ஏற்கனவே வருவாய் இன்றி திண்டாடும் மாநில அரசுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும் என்பதால் மத்திய அரசிடம் மேலும் ஐந்துவருடம் ஜிஎஸ்டி இழப்பு தொகை தரவேண்டும்என்று வலியுறுத்த வேண்டும். கொரோனா... கொரோனா என மாநில அரசு அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் ரத்து செய்துவிட்டது. மாநில அரசின் சார்பில் ரூ.5373 கோடி மட்டும் செலவிட்டுள்ளது. அப்படி என்றால் வசூலான மற்ற தொகை எதற்காக செலவிடப்பட்டது? பொதுப்பணித்துறையில் ஏற்கனவே ரூ.1.10 லட்சம் கோடி மதிப்பிலான பணிகள் பாதியில் நிற்கின்றன. பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகை மிகவும் சொற்பம் ஆகும்.

பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் அமைச்சரவை கூட்டத்தில் ஆளாளுக்கு ரூ.500 கோடி, ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்து கொள்வதால் எங்களை போன்ற எம்எல்ஏக்களின் தொகுதி வளர்ச்சிக்கு நிதி கிடைக்கவில்லை. எங்களுக்கு வாக்கு அளித்த தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யமுடியவில்லை என்றால் எதற்காக இங்கே வரவேண்டும்? மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை கண்டிக்கும்  அதே நேரம் மாநில அரசு மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்கு உரிமை தொகையை பெறுவதில் தீவிரமாக ஈடுபடவேண்டும். கொரோனா... கொரோனா என இன்னும் எத்தனை நாள் கூறிக்கொண்டே இருக்க முடியும்? நாங்கள் வெளியில் தலைகாட்ட வேண்டுமா? வேண்டாமா? இவ்வாறு எல்எல்ஏ சிவலிங்கே லிங்கே கவுடா ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: