பள்ளிகொண்டா, ஜூன் 3: எல்லை தாண்டி வந்து பள்ளிகொண்டா பாலாற்றில் உணவு, குப்பைக்கழிவுகளை கொட்டிய திருமண மண்டப உரிமையாளருக்கு பேரூராட்சி நிர்வாகம் ₹5 ஆயிரம் அபராதம் விதித்தது. வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட பாலாற்று பகுதியில் நேற்று காலை, சிலர் லோடு ஆட்டோவில் உணவு, குப்பைக்கழிவுகளை கொண்டு வந்து கொட்டி கொண்டிருந்தனர். இதையறிந்த பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் தலைமையிலான ஊழியர்கள், அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், செதுவாலை ஊராட்சிக்கு உட்பட்ட தனியார் மண்டபத்தில் இருந்து கழிவுகளை கொண்டு வந்து கொட்டியது தெரியவந்தது.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலருக்கு தகவல் தெரிவித்ததன்பேரில், பாலாற்றை அசுத்தப்படுத்தும்விதமாக திருமண மண்டபத்தின் உணவு கழிவுகளை கொட்டியதற்கு அதன் உரிமையாளருக்கு ₹5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். தொடர்ந்து, மண்டப உரிமையாளர் அபராத தொகையை அலுவலகத்தில் செலுத்தியதையடுத்து வாகனத்தை விடுவித்தனர். தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செயல் அலுவலர் உமாராணி எச்சரிக்கை விடுத்தார். எல்லை விட்டு எல்லை தாண்டி வைத்து திருமண மண்டப உணவு கழிவுகளை பாலாற்றில் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post (வேலூர்) திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு அபராதம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி பாலாற்றில் குப்பை கொட்டிய appeared first on Dinakaran.