திருவள்ளூர்: வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் கனரக லாரி சிக்கிக்கொண்டதால் ரயில்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகில் ஒரு ரயில்வே கேட் அமைந்துள்ளது. திருவள்ளூர் ஹைரோட்டில் இருந்து வேப்பம்பட்டு பகுதிக்குச் செல்லக்கூடிய கனரக வாகனங்களில் இருந்து இருசக்கர வாகனங்கள் வரை அதிகப்படியான வாகனங்கள் இந்த ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றன.
இந்நிலையில் நேற்று காலை இந்த ரயில்வேகேட்டை கனரக லாரி ஒன்று கடக்க முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த லாரி தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் அந்த வழியாகச் செல்லக்கூடிய கருடாத்திரி எக்ஸ்பிரஸ் மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.
தண்டவாளத்தில் லாரி சிக்கிக்கொண்டதால் ரயில்கள் தாமதமாக செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கனரக லாரியை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அரைமணி நேரத்திற்கு பின்னர் தண்டவாளத்தில் சிக்கிய கனரக லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதனையடுத்து சென்னை செல்லக்கூடிய சில ரயில்கள் தாமதமாகச் சென்றதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் சிக்கிய லாரி: ரயில்கள் தாமதமாக சென்றன appeared first on Dinakaran.