வெள்ளிரவெளியில் கோயில் விழாவில் பங்கேற்க தடை விதிப்பவர்கள் மீது நடவடிக்கை-கலெக்டரிடம், பொதுமக்கள் மனு

திருப்பூர் : வெள்ளிரவெளியில் கோயில் விழாவில் பங்கேற்க தடை விதிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது ஊத்துக்குளி தாலுகா வெள்ளிரவெளியை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:வெள்ளிரவெளி பகுதியில் ஏராளமானவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். நாங்கள் இந்து போயர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். வெள்ளிரவெளியில்  மாரியம்மன் கோயி உள்ளது.இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 7 கிராமத்தை சேர்ந்த அனைத்து தரப்பு சமுதாய மக்களும் ஒன்று சேர்ந்து திருவிழா நடத்துவர். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் நிர்ணயம் செய்யும் திருமாங்கல்யம் வரி தொகையை ஒவ்வொரு சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து கோயில் நிர்வாகம் வசூல் செய்யும், இதற்கு ரசீது வழங்கப்படும்.இந்த ஆண்டு கோயில் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் போயர் சமூகத்தினரிடம் திருமாங்கல்ய வரி வாங்க மாட்டோம். சலங்கை ஆட்டம் ஆடக்கூடாது. மா விளக்கு எடுக்கக்கூடாது என தடை விதித்துள்ளனர். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவிழாவில் கலந்துகொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் உரிமையை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. தமிழ்ப்புலிகள் கட்சி மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் திருப்பதி மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனு: எலையமுத்தூரில் இருந்து சுமார் 800 மீட்டர் தூரத்தில் உள்ள ஆண்டியகவுண்டனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருகிறோம். இது விவசாய நிலம். இந்த இடத்தில் நீர் நிலை குளம் உள்ளது. குளத்தில் இருந்து வெளியேறும் நீர் வழிப்பாதையை சோலார் தனியார் கார்ப்பரேட் நிறுவனம் ஆக்கிரமிரத்துள்ளது. இந்த குளத்தை நம்பி ஏராளமான விவசாயிகள் பாசனம் செய்து வருகிறார்கள். எனவே இந்த சோலார் நிறுவனத்தை அகற்ற வேண்டும். சிவசேனா கட்சி இளைஞர் அணி மாநில தலைவர் திருமுருக தினேஷ் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனு:  கால்நடைகள் துன்புறுத்தப்பட்டு கடத்தி செல்வது குறித்து சிவசேனா கட்சி சார்பில் பலமுறை மாநில கட்டுப்பாட்டு அறைக்கும், மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கும் தொலைபேசியில் தொடர்புகொண்டு புகார் தெரிவித்துள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.நாட்டு மாடுகளை காப்பாற்றிடவும், பால் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்காகவும், விவசாயம் செழிப்பதற்காகவும், திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட எல்லைகளில் எஸ்.பி.சி.ஏ. சோதனை சாவடி அமைக்க வேண்டும். சட்ட விதிமுறைகளை மீறி வாகனங்களில் ஆடு, மாடு, கோழி, பன்றி போன்றவைகளை சட்டவிரோதமாக லாரிகளிலும், பிற வாகனங்களிலும் அடைத்து சித்ரவதை செய்து, தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் வழியாக கொண்டு செல்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடி அமைக்க வேண்டும். விலங்குகளை பாதுகாக்க வேண்டும். என கூறியிருந்தனர். முன்னதாக மனு கொடுக்க வந்த போது மாடுகளுடன் சிவசேனா கட்சியினர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பெருமாநல்லூர் தெற்குரத வீதியை சேர்ந்த சண்முகம் மற்றும் பலர் கொடுத்த மனு: ஈட்டிவீரம்பாளையம் பெருமாநல்லூர் குன்னத்தூர் சாலையில் அமைக்கப்பட்டு வரும் பெட்ரோலிய நிறுவனத்திற்கு தடையின்மை சான்று வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனை மனு அளிக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல், தடையின்மை சான்று வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். பல்லடம் கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனு: பல்லடம் கணபதிபாளையம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும், பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளருமான சோமசுந்தரம் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கோகுல் என்பவர் ஆதாரமற்ற புகார் தெரிவித்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை பெதப்பம்பட்டி ஆர்.ஜி.ரத்தனம்மாள்நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனு: எங்கள் பகுதியில் பெதப்பம்பட்டி செலுத்தும் நகரின் 5 தெருக்களை இணைத்து செல்லும் பாதையை தனிநபர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அந்த பகுதியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற வேண்டும். பருவாய் கணபதிநகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனு: பருவாய் கிராமம் மஜரா ஆறாக்குளம் பகுதியில் அருந்ததிய மக்கள் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இந்த இடம் பருவாய் கிராம ஆவணங்களின்படி புறம்போக்கு குட்டை என உள்ளது. ஆனால் மேற்படி பூமியில் குட்டை இல்லை. எனவே இந்த இடத்தை குட்டை புறம்போக்கில் இருந்து நந்தமாக வகைபாடு மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். என் கூறியிருந்தனர்….

The post வெள்ளிரவெளியில் கோயில் விழாவில் பங்கேற்க தடை விதிப்பவர்கள் மீது நடவடிக்கை-கலெக்டரிடம், பொதுமக்கள் மனு appeared first on Dinakaran.

Related Stories: