வீட்டில் பராமரிக்காமல் கழட்டிவிட்டதால் பரிதாபம் சரக்கு ரயிலில் சிக்கி 2 மாடுகள் பலி-வேலூரில் கடும் போக்குவரத்து பாதிப்பு

வேலூர் : வேலூர் டவுன் ரயில் நிலையம் வழியாக சென்ற சரக்கு ரயிலில் 2 மாடுகள் சிக்கியதால் வேலூர்-பெங்களூரு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.வேலூர் நகரில் சாலைகளில் கண்டபடி மாடுகள் சுற்றித்திரிவதால் நாளுக்கு நாள் விபத்துகள் ஏற்படுவதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் தினமும் ரோட்டில் திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதித்து வந்தனர். மாடுகளின் உரிமையாளர்கள் அபராதத்தை கட்டுவதுடன், மாடுகளை தொடர்ந்து சாலைகளில் திரிய விடுகின்றனர்.இதனால் பிற மாநகராட்சிகளை போன்று வேலூரில் நிரந்தரமாக கால்நடைகளை அவிழ்த்துவிடும் போக்குக்கு கடுமையான அளவில் நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் காட்பாடியில் இருந்து விழுப்புரம் நோக்கி நேற்று மாலை சுமார் 5 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. டவுன் ரயில் நிலையம் அருகில் சென்ற போது, தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 மாடுகள் ரயிலில் சிக்கிக் கொண்டன. உடனடியாக சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் மூடப்பட்ட பெங்களூரு சாலை லெவல் கிராசிங் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக பெங்களூரு சாலையின் இருபக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து மீட்புக்குழுவினரும், ரயில்வே போலீசாரும் விரைந்து வந்து ரயிலில் சிக்கி இறந்து கிடந்த 2 மாடுகளையும் மீட்டனர். அதன்பிறகு சரக்கு ரயில் புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மாடுகளை வீட்டில் பராமரிக்காமல் கழட்டிவிட்டதால் ரயிலில் சிக்கி பரிதாபமாக இறந்ததாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே அதிகாரிகள் இனியாவது கடும் நடவடிக்கை எடுத்து சுற்றித்திரியும் மாடுகளை மீட்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது….

The post வீட்டில் பராமரிக்காமல் கழட்டிவிட்டதால் பரிதாபம் சரக்கு ரயிலில் சிக்கி 2 மாடுகள் பலி-வேலூரில் கடும் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: