சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, துணை கேள்வி எழுப்பி விருகம்பாக்கம் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா (திமுக) பேசியதாவது: விருகம்பாக்கம் தொகுதியில் பிரதான பிரச்னையாக, மேன்கோலில் இருந்து கழிவுநீர் ஓவர் ப்ளோ ஆகி ஆகிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, எங்கள் தொகுதியில் 30 மற்றும் 40 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட கழிவுநீர் குழாய்கள்தான் உள்ளன. இன்றைக்கு ஏறக்குறைய 70 சதவீத தெருக்களில் இந்த பிரச்னை இருந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, திங்கட்கிழமை போய் அந்த பணியை செய்தால், மீண்டும் புதன்கிழமை அதே இடத்தில் கழிவுநீர் ஓவர் ப்ளோ ஆகிக் கொண்டிருக்கிறது. பம்பிங் ஸ்டேசனும் மிகவும் குறைவாக இருக்கின்றன. அன்றையதினம் குழாய்கள் பதிக்கும்போது 50,000, 70,000, ஒரு லட்சம் வரைத்தான் மக்கள் வசித்து வந்தனர். ஆனால், இன்றைக்கு ஏறக்குறைய 7 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். கமர்சியல் காம்பளக்ஸ் மற்றும் நட்சத்திர விடுதிகள் அதிகமாக இருக்கின்றன. ஆகவே, இந்த கழிவுநீர் பிரச்னைக்கு நவீன உத்திகளை பயன்படுத்தி தீர்வு காணப்பட வேண்டும். சூளைப்பள்ளம் பகுதியில் 57 தெருக்களுக்கு 40 ஆண்டுகாலமாக கழிவுநீர் வசதியே இல்லாமல் இருக்கிறது. அந்த பகுதிகளுக்கு புதிய கழிவுநீர் வடிகால் அமைக்க வேண்டும்.அமைச்சர் கே.என்.நேரு: ஏற்கனவே அண்ணா சாலையிலிருந்து கலைஞர் பேரில் இருக்கின்ற நகருக்கு செல்கின்ற அந்த கழிவுநீர் பைப் சிமென்டால் ஆனது. கிட்டத்தட்ட 15 அடி, 20 அடி ஆழத்தில் இருக்கின்றன. காலை நேரங்களில் முழுமையாக கழிவுநீர் செல்கிறபோது அந்த குழாய்கள் சேதமடைவதில்லை. மதிய வேளையில் பாதியளவு தண்ணீர் செல்கிற போது, காஸ் உற்பத்தியாகி, அந்த பைல் லைன்களில் எல்லாம் உடைந்து, சாலைகளெல்லாம் சேதமடைந்து விடுகின்றன. இதற்காக தான் முதல்வர் இப்போது, அந்த பகுதிக்கு புதிய குழாய் அமைக்கும் பணிக்கு அனுமதி தந்திருக்கிறார். இப்போதுகூட அந்த பகுதிகளில் ரூ.51 கோடி செலவில் அந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்காக முதல்வர் அனுமதி தந்திருக்கிறார். அதனை சட்டமன்ற உறுப்பினரும் என்னோடு நேரிடையாக வந்து பார்த்தார். பல இடங்களில் குடிநீர் இல்லையென்று சொல்கிறார்கள். குடிநீரைப் பொறுத்தவரையில் சென்னை மாநகருக்கு நாளொன்றுக்கு 990 மில்லியன் லிட்டர் இப்போது குடிநீர் லாரிகள் மற்றும் பைப்புகள் மூலமாகவும் குடிநீர் வழங்கிக் கொண்டிருக்கிறோம். இன்னும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 250 மில்லியன் லிட்டர் எம்எல்டி நீர் கொண்டு வர வசதி இருக்கிறது. உறுப்பினர் சொல்வதை ஆய்வு செய்து, அதிகாரிகளோடு கலந்து ஆலோசித்து என்ன செய்யலாம் என்பதை கண்டறிந்து முதல்வரின் ஒப்புதல் பெற்று, பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது….
The post விருகம்பாக்கம் தொகுதியில் கழிவுநீர் குழாய் உடைந்த இடத்தில் புதிய குழாய் அமைக்கும் பணி: பேரவையில் பிரபாகர்ராஜா கேள்விக்கு அமைச்சர் நேரு பதில் appeared first on Dinakaran.