×

4வது நாளாக கனமழை தவிக்கிறது மும்பை: ரயில் சேவைகள் துண்டிப்பு

மும்பை: மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நேற்றும் ரயில் சேவைகள் முடங்கியது. நாளை வரை பலத்த மழை தொடரும் என்று வானிலை ஆராய்ச்சி இலாகா அறிவித்துள்ளது. மும்பையில் தொடர்ச்சியாக நான்காவது நாளாக நேற்றும் கனமழை கொட்டித் தீர்த்தது. மேற்கு ரயில்வே புறநகர் பிரிவில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியதால் வசாய் மற்றும் விரார் இடையே புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. வதோதரா எக்ஸ்பிரஸ் ரயில் நாலாசாபோரா-விரார் ரயில் நிலையங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டது. இதையடுத்து ரயில் பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர்.

பயணிகளுக்கு அந்த ரயிலிலேயே உணவு பாக்கெட்கள் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது. மும்பை மற்றும் தானேயில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பல சாலைகளில் வாகன போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேற்கு விரைவு நெடுஞ்சாலை, கிழக்கு விரைவு நெடுஞ்சாலை மற்றும் கிழக்கு ப்ரீவே சாலையில் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன. நேற்று முன்தினம் காலை 8.30 மணி தொடங்கி நேற்று காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் தென் மும்பை, கொலாபாவில் 165.8 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800...