வாலாஜா தாலுகா கத்தியவாடி கிராமத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு குடியிருப்புகளுக்கு மாற்று இடம் வழங்கி வீடு கட்டித்தரப்படும்-கலெக்டர் தகவல்

ராணிப்பேட்டை : வாலாஜா வட்டம் கத்தியவாடி கிராமத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு குடியிருப்புகளுக்கு மாற்று இடம் வழங்கி வீடு கட்டித்தரப்படும், என்று கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம் கத்தியவாடி கிராமத்தில் 2 ஏக்கர் நீர்நிலை ஆட்சேபனை புறம்போக்கு நிலம் உள்ளது. இப்பகுதியில் 4 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த ஆட்சேபனை இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டதன் அடிப்படையில், மாற்று இடம் வழங்கி நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதிகளை  கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று ஆய்வு செய்தார்.பின்னர், 4 குடும்ப உறுப்பினர்களிடமும் நீர்நிலை ஆக்கிரமிப்பு இடத்திற்கு மாற்றாக பட்டா இடம் வழங்கி இலவசமாக வீடு கட்டித்தரப்படும். புதிய குடியிருப்பு பகுதியில் தெரு விளக்கு, குடிநீர், சாலை வசதி போன்றவை அமைக்கப்படும்’ என்றார். தொடர்ந்து 4 குடும்பத்தினருக்கு வழங்கப்பட உள்ள மாற்று இடத்தை கலெக்டர் பார்வையிட்டு, மாற்று இடம் வழங்குவதற்கான பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அதைத்தொடர்ந்து, கத்தியவாடி ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டார். அப்போது, பொதுமக்களிடம் தடுப்பூசி குறித்து அச்சப்பட வேண்டாம். 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம், என்றார். அப்போது, கிராம மக்கள் தங்கள் பகுதியில் பகுதிநேர நியாயவிலைக் கடை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கை ஏற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து, வன்னிவேடு பகுதியில் வாலாஜா நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகளில் இருந்து பெறப்படும் குப்பைகளை தரம் பிரிக்க 3.75 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள திடக்கழிவு மேலாண்மை மையம் அமைப்பதற்கான தடையில்லா சான்று வழங்க அப்பகுதியில் கலெக்டர் ஆய்வு செய்தார். 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது குறித்து நகராட்சி பொறியாளரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது, கொரோனா பரவல் காரணமாக கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டதாகவும், பணிகளை தொடங்குவது தொடர்பாக இரண்டு முறை ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறினர். இதனையடுத்து திடக்கழிவு மேளாண்மை மையம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வில் டிஆர்ஓ ஜெயசந்திரன், தாசில்தார் ஆனந்தன், பிடிஓ செந்தாமரை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்….

The post வாலாஜா தாலுகா கத்தியவாடி கிராமத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு குடியிருப்புகளுக்கு மாற்று இடம் வழங்கி வீடு கட்டித்தரப்படும்-கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: