வாகப்பன்னையில் சாலை வசதி இல்லாததால் வனப்பகுதிக்குள் 8 கிமீ தூரம் நடந்து செல்லும் மக்கள்

*மாணவர்களின் கல்வி எட்டாக்கனி*உயிர் பயத்தில் தினமும் நடைபயணம் குன்னூர் : கோத்தகிரி அருகே வாகனபன்னை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் பழங்குடியின மக்கள் சுமார் 8 கிமீ தூரம் நடந்து செல்லும் அவல நிலை நீடித்து வருகிறது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ளது வாகப்பன்னை பழங்குடியின கிராமம். இங்கு சுமார் 60க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 8 கிமீ தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக ஒத்தையடி பாதையில் நடந்துதான் செல்ல வேண்டும். அரசு பேருந்து அல்லது வாகனங்கள் கோத்தகிரி பகுதியில் இருந்து கெங்கரை வரை மட்டுமே செல்லும். கெங்கரை பகுதியில் இருந்து தேயிலை தோட்டங்கள் வழியாக நடக்க வேண்டும். தேயிலை தோட்டம் என்பதால் மழை காலங்களில் ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் ஏராளம். அவற்றின் மத்தியில் தங்களை காத்துக் கொண்டு நடந்து செல்வது கடினம்.தேயிலை தோட்டத்தை கடந்து அடர்ந்த சோலை மரக்காடுகளில் வழியாக இப்பாதை பயணிக்கும். அறிய வகை பறவையின் சத்தம் அனைவரையும் அன்புடன் வரவேற்கும். சோலை மரக்காடுகளில் வழியாக நடந்து சென்றால் மலைகளில் மீது படர்ந்த மேகங்கள் பள்ளத்தாக்குகள் உள்ளது என எச்சரிக்கை விடுக்கும். யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் எச்சம் அவை வந்து செல்லும் பாதை என அறிவிக்கும். வன விலங்குகள் அச்சத்துடனும், இயற்கையை ரசித்தவாறும் சுமார் 8 கிமீ நடந்து சென்றால்  வந்தடையும் வாகப்பன்னை பழங்குடி கிராமம்.  இக்கிராமத்தின் நுழைவாயிலாக பிரம்மாண்டமான காட்டு பலா மரம் இருந்தது‌. இந்த கிராமத்தில் இருளர் மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது, 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்களின் மிகப்பெரிய போராட்டம் என்பது சாலை வசதி. சாலை வசதி இல்லாததால்  கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல முடியாமல் மண் வீடுகளில் தங்கி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். குழந்தைகளின் கல்வி என்பது எட்டாக்கனியாக உள்ளது.  வனவிலங்கு நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் பழங்குடியின குழந்தைகள் தினமும் தங்களது உயிரை பணயம் வைத்து காலை, மாலை என மொத்தம் 16 தூரம் நடந்து சென்று பள்ளியில் கல்வி கற்று வருகின்றனர். மருத்துவ தேவை என்றால் நோயாளிகளை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் இன்றும் தொடர்கதையாக உள்ளது. சமீபத்தில் கரடி தாக்கி காயம் அடைந்த ஒருவரை தொட்டில் கட்டி தூக்கி சென்று சிகிச்சை அளித்தது குறிப்பிடத்தக்கது. சாலை வசதி இல்லாததால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட பெறும் அவதியடைந்து வருகின்றனர். அவர்களுக்கு என‌ சொந்தமாக நிலம் இருந்தும் சாலை வசதி இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் தேயிலை தோட்டங்களில் கூலி வேலை செய்து வருகின்றனர்.‌ வாகப்பன்னை கிராமத்திற்கு செல்லும் பாதை, தனியார் எஸ்டேட் பகுதி என்பதால் எஸ்டேட் நிர்வாகம் அங்கு சாலை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும் இதுவரை சாலை இல்லை.இது குறித்து அக்கிராமத்தை சேர்ந்த பிச்சை முத்து கூறுகையில், ‘‘எனது மகன் கீழ் கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகிறார். சாலை வசதி இல்லாததால் தினமும் வனப்பகுதி வழியாக 8 கிமீ தூரம் நடந்து சென்று வருகிறார். வனப்பகுதி என்பதால் காலை மற்றும் மாலை நேரங்களில் நான் மகனை கூட்டி சென்று வருகிறேன். சாலை வசதி கிடைத்தால் எனது மகனின் கல்வி வெளிச்சம் பெறும்’’ என்றார். வடிகி என்ற மூதாட்டி கூறுகையில், ‘‘சிறு வயது முதலே தினமும் நடந்து சென்று வருகிறோம். அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட கிட்டத்தட்ட 8 கிமீ தூரம் சென்றுவர வேண்டும். எங்களுக்கு சொந்தமாக நிலம் உள்ளது. ஆனால், சாலை வசதி இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் தனியார் தேயிலை தேட்டங்களில் கூலி வேலை செய்து வருகிறோம். அடிப்படை வசதி இல்லாததால் பலர் கிராமத்தை விட்டு வெளியே சென்று விட்டனர். பழங்குடியின மக்களான எங்களுக்கு காடுகளை விட்டு வெளியே வர எண்ணம் இல்லை. எனவே, சாலை வசதி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.இது குறித்து சப் கலெக்டர் தீபனா விஸ்வேஷ்வரி கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள வாகப்பனை பழங்குடியின மக்கள் நீண்ட காலமாக சாலை வசதி கேட்டு வருகின்றனர். சாலை அமைக்கும் இடம் தனியார் எஸ்டேட் நிர்வாகத்திற்கு சொந்தமானது. தற்போதுதான், தனியார் எஸ்டேட் நிர்வாகம் சாலை அமைக்க அனுமதி அளித்துள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். அதன்பின், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றார். எனவே தமிழக அரசு வாகப்பன்னை பழங்குடியின மக்களின் போராட்டத்தின் ஒன்றான சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.`அரசு நினைத்தால் முடியும்’கெங்கரை பஞ்சாயத்து தலைவர் முருகன் கூறியதாவது: வாகப்பன்னை பழங்குடியின கிராமத்தில் வசிக்கும் மக்கள் தினமும் 8 கிமீ தூரம் நடந்து சென்று வருகின்றனர்.  மருத்துவ தேவை என்றால் கர்ப்பிணி பெண்களை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் நீடித்து வருகிறது. அந்த கிராமத்திற்கு சாலை அமைக்க வேண்டும் என்றால் செல்லும் பாதை தனியாருக்கு சொந்தமான இடம். எனவே, தனியார் எஸ்டேட் நிர்வாகத்திடம் நாங்கள் முறையிட்டோம். பழங்குடியின மக்கள் நலன் கருதி தனியார் எஸ்டேட் நிர்வாகமும் அங்கு சாலை அமைக்க அனுமதி அளித்துள்ளனர். தமிழக அரசு முயற்சி செய்தால் நிச்சயமாக இந்த கிராமத்திற்கு சாலை வசதி அமைத்து தர முடியும்’‘ என்றார்….

The post வாகப்பன்னையில் சாலை வசதி இல்லாததால் வனப்பகுதிக்குள் 8 கிமீ தூரம் நடந்து செல்லும் மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: