டெல்லி: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழக்கில் சி.பி.எஸ்.இ. நாளை உச்சநீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்ய உள்ளது. நீட் தேர்வில் தமிழில் மொழி மாற்றம் செய்து கேட்கப்பட்ட கேள்விகளில் 49 கேள்விகள் தவறாக இருந்ததால் ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் 196 மதிப்பெண்களைச் சேர்த்து புதிய தரவரிசை பட்டியல் தயாரிக்கவும் மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டு, சில மாநிலங்கள் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்துவிட்டது. மேலும் சில மாநிலங்களில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
இந்நிலையில் தமிழில் நீட் தேர்வு எழுதிய சுமார் 24,700 பேருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க உத்தரவிட்டு இருப்பது சி.பி.எஸ்.இ. அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்ற கிளை உத்தரவு குறித்து சட்ட நிபுணர்களுடனும் கலந்து ஆலோசித்த சி.பி.எஸ்.இ. மூத்த அதிகாரிகள், சட்ட ரீதியாக இந்த பிரச்சினையை அணுக முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய சி.பி.எஸ்.இ. அதிகாரிகள், மத்திய மனித வளத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்கள். மத்திய மனித வளத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அப்பீல் மனுவை தாக்கல் செய்ய உள்ளது.
சி.பி.எஸ்.இ. அப்பீல் மனுவில் குறிப்பிட்ட அம்சங்கள்:*மாநில மொழிகளில் நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு 2 மொழிகளில் வினா புத்தகம் வழங்கப்படும்.*ஒன்று மாநில மொழியிலும், மற்றொன்று ஆங்கிலத்திலும் இருக்கும்.*மாநில மொழியில் நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு, கேள்வி மொழி மாற்றத்தில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் ஆங்கிலத்தில் உள்ளதை பார்த்துக் கொள்ள வேண்டும். *ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் தான் இறுதியானதாக கருதப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!