ரூ.60 கோடி மதிப்பிலான மஞ்சள் தேக்கம் 44 நாட்களுக்கு பிறகு ஏலம் தொடங்கியது

ஈரோடு : கொரோனா பரவல் காரணமாக 44 நாட்களாக தேங்கி கிடந்த மஞ்சள் ஏலம் நேற்று தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஈரோட்டில் உள்ள ஒழங்குமுறை விற்பனை கூடங்கள், கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடைபெற்று வந்த மஞ்சள் ஏலங்கள் கடந்த 44 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்தது. வழக்கமாக ஈரோட்டில் நாள் ஒன்றுக்கு ரூ.1.50 கோடி மதிப்பிலான மஞ்சள் வர்த்தம் நடைபெறுவது வழக்கம். கடந்த 44 நாட்களாக மஞ்சள் ஏலம் நடைபெறாததால் சுமார் ரூ.60 கோடி மதிப்பிலான 75 ஆயிரம் மஞ்சள் மூட்டைகள் குடோன்களில் தேங்கி கிடக்கின்றது. இந்நிலையில், தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மஞ்சள் ஏலம் தொடங்கி உள்ளதால் ஈரோட்டிலும் மஞ்சள் ஏலம் நடத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியதையடுத்து நேற்று முதல் ஈரோட்டில் மஞ்சள் ஏலம் தொடங்கியது.  இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது: ஈரோட்டில் உள்ள மஞ்சள் ஏல மையங்களில் நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 40 நாட்களாக ஏலம் நடைபெறவில்லை. இதனால் ரூ.60 கோடி மதிப்பிலான 75 ஆயிரம் மூட்டை மஞ்சள் தேக்கமடைந்தது. இந்நிலையில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நேற்றுஏலம் நடைபெற்றது. பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மஞ்சள் குவிண்டால் விரலி ரூ.6102 முதல் ரூ.7072 வரையிலும், கிழங்கு ரூ. 5699 முதல் ரூ.6852 வரையிலும் ஏலம் போனது. ஈரோடு சொசைட்டியில் மஞ்சள் குவிண்டால் ரூ.6932 முதல் ரூ.7959 வரையிலும், கிழங்கு ரூ.6412 முதல் ரூ.7699 வரையிலும் விற்பனையானது. ஈரோட்டில் உள்ள குடோன்களில் சுமார் 3 லட்சம் மூட்டை மஞ்சள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விலை சரிவால் சாகுபடி பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் குறைந்து கொண்டே வருகின்றது. இந்தாண்டுக்கான மஞ்சள் விதைப்பு பணி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் இறுதிவரை விதைப்பு பணி நடைபெறும். இவ்வாறு சத்தியமூர்த்தி கூறினார்….

The post ரூ.60 கோடி மதிப்பிலான மஞ்சள் தேக்கம் 44 நாட்களுக்கு பிறகு ஏலம் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: