ரூபாய்க்கு மதிப்பு

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை அதன் உள்நாட்டு உற்பத்தியும், ஏற்றுமதி வர்த்தகமும் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பெரிய நாடுகளோடு இந்தியா நல்லதொரு வர்த்தக உறவில் உள்ளது. பருத்தி, இரும்பு, கணினி உதிரி பாகங்கள், மருந்துகள், தானியங்கள் உள்ளிட்டவை இந்தியாவின் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெட்ரோலிய பொருட்கள் இந்தியாவின் முக்கிய இறக்குமதிகளில் ஒன்றாக உள்ளது.ஏற்றுமதி, இறக்குமதி பொருட்கள் பெரும்பாலும் டாலரை பயன்படுத்தியே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இறக்குமதி அதிகமாகும் நேரத்தில் எல்லாம் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவதை காண்கிறோம். மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதை தவிர்க்கும் வகையில் தற்போது ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான பணபரிவர்த்தனையை ரூபாயிலே மேற்கொள்ளும் வகையில் ஒன்றிய அரசு வர்த்தக கொள்கையில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.இதற்கான அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டு விட்டது. இதற்காக இந்திய வங்கிகள் வோஸ்ட்ரோ கணக்குகளை வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் திறக்கும். அந்தந்த நாட்டு நாணயங்களில் குறிப்பிட்ட தொகையை வைப்பு தொகையாக செலுத்தும். அதேபோல் வெளிநாட்டு வங்கிகள் இந்திய வங்கிகளில் கணக்குகளை தொடங்கி, குறிப்பிட்ட தொகையை பணமாக செலுத்தும். ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இந்தியாவில் உள்ள வணிகர்கள் அந்த குறிப்பிட்ட வங்கிகளை பயன்படுத்தி ரூபாயிலே அனைத்து வணிகத்தையும் எளிதில் செய்து முடிக்க முடியும்.ஒன்றிய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் இத்தகைய நடவடிக்கைகளால் சரிந்த ரூபாயின் மதிப்பு உயர வாய்ப்புகள் உள்ளன. மேலும் அமெரிக்காவின் பொருளாதார தடையால் பாதிப்பை சந்தித்துள்ள ரஷ்யாவோடு, இந்தியா வர்த்தகத்தை இனிமேல் எளிதாக மேற்கொள்ள முடியும். உலகளாவிய வர்த்தகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப இந்தியாவும் தன் பங்களிப்பை மேற்கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதற்கு நாம் இந்திய ரூபாயின் மதிப்பிலே ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை மேற்கொள்வது நலம் பயக்கும். ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்களும் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர், ரூபிள், யூரோ என அந்நிய நாணயங்களை கணக்கு பார்க்க வேண்டியதில்லை. ரூபாய் மதிப்பை உலக அரங்கிலும் நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. அதற்கான இப்போதைய முயற்சிகள் வெற்றி பெறட்டும்….

The post ரூபாய்க்கு மதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: