மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை நியமிக்க தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை நியமிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை நியமனம் செய்ய உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்திருக்கிறது. தனது நியமனத்தை ரத்து செய்ததை எதிர்த்து செல்லத்துறை தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இடைக்கால உத்தரவை பிறப்பித்திருக்கின்றனர். செல்லத்துறை என்பவரை கடந்த 2017ம் ஆண்டு மே 26ம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆளுநர் நியமித்தார். அந்த நியமனத்தை எதிர்த்து டிராபிக் ராமசாமி, அந்தோனி ராஜ் ஆகிய 2 பேருமே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், செல்லத்துறை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்ததை ரத்து செய்தது. அந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செல்லத்துறை மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் செல்லத்துறையின் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் இன்றைக்கு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சித்தரி, அசோக் பூஷன் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது செல்லத்துறையின் சார்பில் ஆஜராகி இருந்த மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ஆளுநர் கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி செல்லத்துறையை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் செய்தார். அவர் மிகுவும் தகுதியான நபர் என்று வாதித்தார். மேலும் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அதே சமயத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜராகி இருந்த மூத்த வழக்கறிஞர் சேகர் மற்றும் கே.கே.வேணுகோபால் ஆகியோர் தங்களது வாதத்தை முன்வைக்கும் போது, செல்லத்துறையை பொறுத்தவரையில் பி.ஏ., எல்.எல்.பி., படிக்காதவர் என்றும், அவர் மதுரை பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்ட போது, அவர் மீது கொலை முயற்சி வழக்கு நிலுவையில் இருந்ததாகவும், எனவே அவரது நியமனம் செல்லாது என்று ரத்து செய்தது சரி தான் என்று வாதிட்டார். மேலும் தற்போது புதிய துணைவேந்தர் நியமனம் செய்வது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செல்லத்துறை சார்பில் ஆஜரான முகுல் ரோத்தகி வாதித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். 6ம் தேதி வரை புதிய துணைவேந்தரை நியமனம் செய்யக்கூடாது என்பதும் நீதிபதிகளின் உத்தரவாக இருக்கிறது. மீண்டும் இந்த வழக்கு 6ம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: