ரயில்வே அருங்காட்சியகத்தை மாணவ, மாணவிகள் பார்வையிட வேண்டும்

 

நாகப்பட்டினம், செப். 11: நாகூர் தனியார் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்திய ரயில்வே சார்பில் மாணவிகளுக்கு ரயில்வே விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு நாகூர் – நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போர் நலச்சங்க செயலாளர் சித்திக் வரவேற்றார். நாகூர் தர்கா அறங்காவலர் செய்யது முஹம்மது காஜி ஹுசைன்சாஹிப் தலைமை வகித்தார். தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட இயக்கவியல் மேலாளர் ஹரிக்குமார் பேசுகையில், ‘‘திருச்சி கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே அருங்காட்சியகம், 91 ரயில்வே ஸ்டேஷன்களின் கட்டுப்பாட்டு அறை எவ்வாறு செயல்படுகிறது என்பதை மாணவர்கள் பார்வையிட்டு தெரிந்துகொள்ள வேண்டும்’’ என்றார். இதை தொடர்ந்து மாணவிகள் கேட்ட சந்தேகங்களுக்கு ஹரிக்குமார் பதிலளித்தார்.
பின்னர், நாகூர் – நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்பாளர் நலச்சங்கம் சார்பில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவில், ‘‘காரைக்காலில் இருந்து பகலில் தாம்பரம் வரை தினசரி விரைவு ரயில் இயக்க வேண்டும். ஈரோடு – திருச்சி ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும்.

நாகப்பட்டினம் – வேளாங்கண்ணி டெமோ ரயிலை இரவில் திருச்சி வரை விரைவு ரயிலாக இயக்க வேண்டும்’’ என குறிப்பிட்டனர். இதற்கு பதிலளித்த கோட்ட இயக்கவியல் மேலாளர் ஹரிக்குமார், ‘‘பேரளம் – காரைக்கால் 23 கிலோ மீட்டர் பாதை பயன்பாட்டுக்கு வரும்போது தான் இப்பகுதிக்கு மாற்றங்கள் ஏற்படும். தற்போது காரைக்கால் ரயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் தான் உள்ளன. நாகப்பட்டினம் – வேளாங்கண்ணி செல்ல இன்ஜினை கழற்றி மாற்றி இயக்குவதில் சிரமம் உள்ளது. எனவே பேரளம் – காரைக்கால் ரயில் பாதை பணி முடிந்தவுடன் இந்த கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் என்றார். முடிவில் பள்ளி துணை முதல்வர் சியாமளா நன்றி கூறினார்.

The post ரயில்வே அருங்காட்சியகத்தை மாணவ, மாணவிகள் பார்வையிட வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: