மகாளய அமாவாசையை முன்னிட்டு அம்மா மண்டபத்தில் தூய்மை பணி மூட்டை மூட்டையாக பழைய துணிகள் அகற்றம் மாநகராட்சி ஊழியர்கள் சுறுசுறுப்பு

திருச்சி, அக்.2: திருச்சி அம்மா மண்டபத்தில் இன்று (அக்.2) நடைபெறவுள்ள மகாளய அமாவாசையை முன்னிட்டு மாநகராட்சி பணியார்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று துாய்மை பணியில் ஈடுபட்டனர்.
இந்துக்கள் அமாவாசை தினத்தில் பொதுவாக முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். அமாவாசை தினங்களில் தை அமாவாசையும், மகாளாய அமாவாசையும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மற்ற அமாவாசை தினங்களில் தர்ப்பணம் அளிக்க இயலாதவர்கள் கூட, இந்த தை மற்றும் மகாளய அமாவாசை தினங்களில் தங்கள் முன்னோர்களுக்கு தவறாது தர்ப்பணம் கொடுத்துவிடுவர்.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை அல்லது மகாளய பட்ச காலம் எனப்படும். மகாளய பட்ச காலத்தில் முன்னோர்கள், தங்கள் சந்ததியினர் செலுத்தும் தர்ப்பணத்திற்காக காத்திருப்பார்கள் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது. மகாளய பட்ச காலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் முன்னோர்கள் ஆசியுடன், வாழ்க்கை சிறப்பாக அமையும் என வேதங்கள் கூறுவதாக தெரிவிக்கின்றனர். இந்த மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்கள் பூலோகம் வருவதாக நம்பப்படுகிறது. ‘மகாளயம்’ என்றால் கூட்டம் என்பது பொருளாகும். இந்த மகாளய பட்ச நேரத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரும் கூட்டமாக வருவார்கள் என்பதால், அன்றைய தினம் தர்ப்பணம் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது.

ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை தினத்தன்று திருச்சி காவிரி ஆறு செல்லும் அம்மா மண்டபத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வர். இதற்காக நேற்று திருச்சி மாநகராட்சி சார்பில் அம்மா மண்டபம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர். அம்மா மண்டப பகுதி மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் கூட்டி சுத்தம் செய்யப்பட்டது. படித்துறை பகுதி மற்றும் படித்துறையில் தண்ணீருக்கு அடியில் பக்தர்கள் விட்டுச்சென்ற ஏராளமான ஆடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. தர்ப்பணம் செய்ய வருவோருக்கு தேவையான குடிதண்ணீர் மற்றும் கழிவறை ஆகிய அடிப்படை வசதிகள் தேவைக்கேற்ப செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க அப்பகுதியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

The post மகாளய அமாவாசையை முன்னிட்டு அம்மா மண்டபத்தில் தூய்மை பணி மூட்டை மூட்டையாக பழைய துணிகள் அகற்றம் மாநகராட்சி ஊழியர்கள் சுறுசுறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: