ஆக்கிரமிப்பால் சுருங்கிபோன செங்காநத்தம் சாலை: வாகன ஓட்டிகள் அவதி

வேலூர்: வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 22வது வார்டில் மூலக்கொல்லை பகுதி உள்ளது. இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மூலக்கொல்லை வழியாக அடுத்த செங்காநத்தம், மேலகுப்பம், பூட்டுதாக்கு ஆகிய பகுதிகளுக்கு தினசரி ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், மூலக்கொல்லை பகுதியில் சாலையை தனிநபர் பலர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 20 அடி சாலை, தற்போது, சுருங்கி ஒரு வழிபாதையாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் செங்காநத்தம் பகுதியில் உள்ள காலபைரவர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மேலும், இப்பகுதியில் மாநகராட்சி சார்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால், செங்காநத்தம் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாக சென்றுவரும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கி தவறிவிழுந்து படுகாயமடைகின்றனர். எனவே தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்தி, தார் சாலை அமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோயிலில் அமைச்சர் தரிசனம்

செங்காநத்தம் காலபைரவர் கோயிலுக்கு நேற்று இவ்வழியாக அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அதிமுகவினர் சென்று சுவாமி தரிசனம் செய்து திரும்பினர். சேறும், சகதியும் நிறைந்த சாலையில் அமைச்சர் மற்றும் அதிமுகவினரின் கார்கள் ஒரேநேரத்தில் தொடர்ச்சியாக சென்றது. இதனால் எதிர்திசையில் வந்த வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சாலை ஆக்கிரமிப்புகளால் இதுபோன்ற நிலை ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Related Stories: