மேடையிலும், பிரசாரத்திலும் எதிரொலிக்குது ‘‘ஒழிக’’ கோஷம் தொகுதி மக்கள் தொடர் எதிர்ப்பு தோல்வி பயத்தில் ஓபிஎஸ் தவிப்பு: பிரசாரத்துக்கு செல்லவே அச்சம்

தேனி மாவட்டம், போடி தொகுதியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் பொறுப்பில் உள்ள ஓபிஎஸ், 3வது முறையாக போட்டியிடுகிறார். கடந்த 2 முறை போட்டியிட்ட போது இருந்ததை விட இம்முறை இவருக்கு தொகுதியில் பலத்த எதிர்ப்பு நிலவுகிறது. பெயரை குறிப்பிட்டே பொதுமக்கள் ‘‘ஒழிக’’  கோஷமிடுவதால், ஓபிஎஸ் கடும் அப்செட்டில் உள்ளார்.* மேடையிலே கோஷம்…தேவேந்திர குல வேளாளர் அரசாணை, வன்னியருக்கு உள் இட ஒதுக்கீடு விவகாரங்கள் ஓபிஎஸ்க்கு பெரும் பின்னடைவை தந்துள்ளன. இந்த விவகாரங்கள், தேனி மாவட்டத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த பிப். 24ம் தேதி போடி, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே வஉசி சிலை திறப்பு விழா நடைபெற்றது. அப்போது மேடையில் அமர்ந்திருந்த ஓபிஎஸ்சை பார்த்து, 2 பெண்கள் மற்றும் இளைஞர்கள், ‘‘எங்களது சமூக பெயரை மற்ற சமுதாயத்திற்கு எப்படி தாரை வார்க்கலாம். ஓபிஎஸ் ஒழிக… ஒழிக…’’ என கோஷமிட்டனர். இதையடுத்து கோஷமிட்டவர்களை போலீசார் அடித்து இழுத்துச் சென்றதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.* மீண்டும் ‘‘ஒழிக’’ கோஷம்…அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து  முதல்வர் எடப்பாடி உட்பட பலர் பிரசாரத்தை முன்னரே தொடங்கி மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். ஆனால், ஓபிஎஸ் தொடர்ந்து பிரசாரத்துக்கு செல்லாமலே இருந்தார். இது அதிமுகவினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. திடீரென நேற்று முன்தினம் தேனி மாவட்டம், போடி குயவர்பாளையத்தில் உள்ள ஒரு சமூகத்தினருக்கு சொந்தமான சமுதாயக்கூடத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அங்கு வந்த ஒரு சமுதாயத்தை சேர்ந்த எதிர்க்கட்சியினர், ‘‘சமுதாய கூடத்திற்குள் வந்து எப்படி வாக்கு சேகரிக்கலாம்?’’ என்று கூறி அதிமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  அப்போது அதிமுகவினர், ஓபிஎஸ்சின் இளைய மகன் ஜெயபிரதீப் தலைமையில், ஓட்டிற்கு பணம் கொடுத்து கொண்டிருந்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து ஒரு பிரிவினர் மற்றும் எதிர்க்கட்சியினர், துணை முதல்வரை முற்றுகையிட்டனர். அவரை சிறைபிடித்து வெளியேற விடாமல் சுற்றி வளைத்தனர். மேலும், ‘‘ஓபிஎஸ் ஒழிக… ஓபிஎஸ் ஒழிக’’ என நூற்றுக்கணக்கானோர் திரண்டு கோஷமிட்டதால் பரபரப்பு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விழா மேடை, மனு தாக்கல், பிரசாரம் என போடி தொகுதியில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளில் தொடர் எதிர்ப்பு கிளம்புவதால், ஓபிஎஸ் அச்சமடைந்துள்ளார். பிரசாரத்தை தொடர்வதா, வேண்டாமா என ஆதரவாளர்களுடன்  ஆலோசனை நடத்தி வருகிறார். தனக்கு ஆதரவான இடங்களில் மட்டும் பிரசாரத்தை தொடர திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.* சொந்த ஊரிலும் அதிருப்தி‘‘வேளாளர்’’  பெயரை மாற்று சமூகத்திற்கு வழங்க பரிந்துரை செய்த தமிழக அரசை கண்டித்து, வேளாளர் சமுதாய முன்னேற்ற கழக மாநில இளைஞரணி செயலாளர் பந்தல் ராஜா, போடி தொகுதியில் ஓபிஎஸ்சுக்கு எதிராக தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டது. இவரை திடீரென சென்னையில் போலீசார் கைது செய்தனர். இதைக்கண்டித்து மறியல் போராட்டங்கள், ஓபிஎஸ்சின் சொந்த ஊரான பெரியகுளத்தில் போராட்டங்கள் நடந்தன. ஓபிஎஸ் வீட்டுக்கு செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டன. போலீசார் தரப்பு கெடுபிடியால், பெரியகுளம் பகுதி மக்களும் ஓபிஎஸ் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும், பெரியகுளம் வேட்பாளர் முருகன் தேர்வில், அதிமுக கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். * பணப்பட்டுவாடா புகார்தமிழகத்தில்  சட்டமன்ற தேர்தல் தேதி கடந்த பிப். 26ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே போடி நகர் மற்றும் கிராமப்பகுதிகளில் அதிமுகவினர் வீடு, வீடாகச் சென்று, ரேஷன் கார்டுகளின் ஜெராக்ஸ் காப்பிகளை வாங்கிக் கொண்டு, ரூ.2 ஆயிரம் ரொக்கம், வேட்டி, சேலை மற்றும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை  ஆட்டோக்கள், மினிடெம்போக்களில் வைத்து வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சியினர், பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஒரு ஓட்டுக்காக ரூ.6 ஆயிரம் வரை வழங்க உள்ளதாகவும், அவரது வீட்டை சுற்றிலும் நின்ற ஏராளமான வாகனங்களில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். இதையடுத்து பறக்கும் படையினர் சோதனை நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post மேடையிலும், பிரசாரத்திலும் எதிரொலிக்குது ‘‘ஒழிக’’ கோஷம் தொகுதி மக்கள் தொடர் எதிர்ப்பு தோல்வி பயத்தில் ஓபிஎஸ் தவிப்பு: பிரசாரத்துக்கு செல்லவே அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: