×

கேள்விக்குறியான இந்திய நீதித்துறை : நீதிபதி நியமனத்தில் அரசியல்....கொலீஜியம் பரிந்துரைத்த இருவரில் ஒருவர் மட்டுமே நியமனம்

புதுடெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்த இருவரில் ஒருவரை மட்டுமே மத்திய அரசு நீதிபதியாக நியமித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.என். ஜோசப் மற்றும் மூத்த வழக்கறிஞர் இந்துமல்கோத்ரா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கக் கோரி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் மத்திய அரசுக்கு ஜனவரி 10-ம் தேதி பரிந்துரை அளித்தது. ஆனால் 3 மாதங்களாக அதை கிடப்பில் போட்டிருந்த மத்திய அரசு தற்போது இந்து மல்கோத்ராவை மட்டும் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அனுமதி அளித்துள்ளது.

ஆனால் நீதிபதி கே.என். ஜோசப்பை நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த செயல் இந்திய நீதித்துறையை கேள்விக்குறியாக்கி உள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது. காங்கிரஸின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் காங்கிரஸ் ஆட்சியில் தான் நீதித்துறையில் விதிமுறைகள் மீறப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்திரா காந்தியின் ஆட்சியிலேயே நீதித்துறையில் தலையீடு செய்யப்பட்ட வரலாறு இருக்கிறது என்று கூறியுள்ளார். எமர்ஜென்சி காலத்திலும் துணிச்சலான தீர்ப்புகளை அளித்தவர் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எச்.ஆர்.கர்ணா. இவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தி வந்தது. இதற்கு இந்திரா காந்திக்கு எதிராக அவர் தீர்ப்பு வழங்கினார் என்பதால் அவர் புறக்கணிக்கப்பட்டார் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

கொலீஜியத்தால் நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்ட கே.என்.ஜோசப் 2016-ம் ஆண்டு உத்தகாண்டில் குடியரசு தலைவர் ஆட்சியை ரத்து செய்து தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற அமர்வில் இருந்தவர். இதனால் தான் கொலீஜியம் பரிந்துரை செய்தும் அவரது பெயரை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இந்து மல்கோத்ரா நாளை பதவியேற்கிறார். இவர் சுகந்திர இந்தியாவில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றும் 7-வது நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்