முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரம் பறிப்பு: காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி அதிரடி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், நிதி ஆளுமை முறைகேட்டில் ஈடுபட்ட மாத்தூர் ஊராட்சி தலைவர், துணை தலைவர்களின் அதிகாரத்தினை தற்காலிகமாக பறித்து, கலெக்டர் ஆர்த்தி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், மாத்தூர் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் சுமார் 200க்கும் அதிகமான பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தொழிற்சாலை மூலம் ஊராட்சிக்கு பல கோடி வருவாய் கிடைக்கிறது. தற்போது, இந்த ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக, ஊராட்சி மன்ற தலைவர் கோபி, துணை தலைவர் ஆறுமுகம் ஆகியோர் மீது காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலத்தில், வார்டு உறுப்பினர்கள் 5 பேர் புகார் அளித்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். அப்போது, சுமார் ரூ.2 கோடி ஊராட்சி நிதி முறைகேடு செய்துள்ளனர் என்று வார்டு உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். மேலும் குடிநீர், தெருவிளக்கு, பிளீச்சிங் பவுடர் தெளிப்பு, பெயர் பலகை அமைத்தது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மூலம் கையாடல் நடந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்தது. இதனால், ஊராட்சி துணை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் 5 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊராட்சி தலைவர், துணை தலைவர், வார்டு உறுப்பினர்களை அழைத்து எம்எல்ஏ சமாதானம் பேசினார்.

ஆனால், ஊராட்சி மன்ற தலைவர் மறுப்பு தெரிவித்ததால், வார்டு உறுப்பினர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதனையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியின் உத்தரவின்பேரில், ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகுமார், மாத்தூர் ஊராட்சியில் கோப்புகளை ஆய்வு செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தார். இதில், முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர் அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்படுவதாக கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், ஐயங்கார் குளம் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டா சுந்தரமூர்த்தி, கட்டிட வரைபடம் அனுமதி வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்ததை தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவர் வேண்டா சுந்தரமூர்த்தியின் அதிகாரங்களை பறித்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊத்துக்காடு, ஆதனூர் என இரு ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரங்களை பறிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

The post முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரம் பறிப்பு: காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: