முறைகேடாக குடிநீர் வழங்கிய டேங்க் ஆபரேட்டர் சஸ்பெண்ட்

நல்லம்பள்ளி, ஜூலை 20: நல்லம்பள்ளி அருகே, குடிநீர் தொட்டியில் இருந்து முறைகேடாக மீன் குட்ைடக்கு தண்ணீர் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக, டேங்க் ஆபரேட்டரை சஸ்பெண்ட் செய்து பிடிஓ உத்தரவிட்டுள்ளார். மேலும், மீன்குட்டை உரிமையாளருக்கு ₹8,189 அபராதம் விதிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம், மானியதஅள்ளி ஊராட்சி மலையப்பநகர் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து, அதன் மூலம் ஒகேனக்கல் குடிநீர் வழங்கி வருகிறது. இந்த தொட்டியில் இருந்து, முறைகேடாக பூமிக்கடியில் பிளாஸ்டிக் பைப் அமைத்து, அப்பகுதியை சேர்ந்த நபர் தான் அமைத்துள்ள 4 மீன் குட்டைகளுக்கு, தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வந்தார். இதனால், கிராம மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகினர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், மீன்குட்டை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அரசு பஸ்சை சிறை பிடித்து மறியல் போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக, நல்லம்பள்ளி பிடிஓ தலைமையிலான அதிகாரிகள் மற்றும் தொப்பூர் போலீசார், மலையப்ப நகர் கிராமத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தியதில், அங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து பூமிக்கடியில் முறைகேடாக பிளாஸ்டிக் பைப்புகள் அமைத்து, முறைகேடாக ஒகேனக்கல் குடிநீரை பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, முறைகேடாக ஒகேனக்கல் குடிநீரை பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக, சம்மந்தப்பட்ட பெண் டேங்க் ஆப்ரேட்டர் நாகம்மாள் என்பவரை, தற்காலிக பணி நீக்கம் செய்தார். மேலும், மீன்குட்டை அமைத்தவருக்கு, முறைகேடாக பயன்படுத்திய ஒகேனக்கல் குடிநீருக்கு ₹8189 அபராதமாக செலுத்த வேண்டும் என, நல்லம்பள்ளி பிடிஓ ஆறுமுகம் உத்தரவிட்டுள்ளார்.

The post முறைகேடாக குடிநீர் வழங்கிய டேங்க் ஆபரேட்டர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: