முதல்வரின் காலை உணவு திட்டத்தின் மூலம் நெல்லையில் 348 பள்ளிகளில் 17 ஆயிரம் குழந்தைகள் பயன்: சபாநாயகர் அப்பாவு பேச்சு

நெல்லை, ஆக.26: முதல்வரின் காலை உணவு திட்டத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 348 பள்ளிகளில் 17,444 குழந்தைகள் பயன்பெறுவார்கள் என்று சபாநாயகர் அப்பாவு பேசினார். முதல்வரின் காலை உணவு திட்டம் மாநிலம் முழுவதும் உள்ள 31 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் பேரில் நெல்லை மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. ராதாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

இதை தொடர்ந்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் கார்த்திகேயன் காலை உணவு அருந்தினர். நிகழ்ச்சியில் ராதாபுரம் பஞ்சாயத்து தலைவர் பொன்மீனாட்சி அரவிந்தன், சிதம்பராபுரம் பஞ்சாயத்து தலைவர் பேபி முருகன், மாவட்ட கவுன்சிலர் ரூபா, ஒன்றிய கவுன்சிலர் பரிமளம், ராதாபுரம் கூட்டுறவு சங்க தலைவர் அரவிந்தன் கோவிந்தராஜ், சதீஷ், அவைதலைவர் ராமையா பாலன், இளையநயினார்குளம் மூர்த்தி, பஞ்சாயத்து துணை தலைவர் சபாபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், ‘தமிழகத்தின் ஆரம்ப பள்ளிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிடும் போது பள்ளி மாணவர்களிடையே பேசினார்.

அப்போது மாணவிகள் காலையில் தங்கள் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விடுவதால் காலையில் உணவு உண்ணவில்லை என்று தெரிவித்தனர். இதனை கேட்டு மனம் நெகிழ்ந்த முதல்வர் தமிழ்நாட்டில் காலை சிற்றுண்டி திட்டத்தை கடந்த ஆண்டு பரிட்சார்த்த முறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார்.  காலை உணவு குழந்தைகளின் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிப்பதோடு இரவு உணவுக்கு பின் ஏற்படும் நீண்ட இடைவெளியுடன் கூடிய பசியை தணிப்பதாக அமைகிறது. காலை உணவினை தவிர்க்கும் நிலையில் உள்ள குழந்தைகள் மிகுந்த சோர்வுடனும், கவனிப்பு திறன் குறைந்து காணப்படுவர் என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

காலையில் உணவு சாப்பிடாமல் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த முடியாமல் சோர்வடைந்து விடுகின்றனர். இதை கருத்தில் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 348 பள்ளிகளில் சுமார் 17,444 குழந்தைகள் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர். இதன் மூலம் மாணவர்கள் தடையின்றி பயில்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு மாணவர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட அரசாக இந்த அரசு திகழ்ந்து வருகிறது. பாரதியார் தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றார். இப்போது நமது முதல்வர் நமது பள்ளி குழந்தைகள் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காக இந்த திட்டத்தை துவக்கி உள்ளார்’ என்றார்.

The post முதல்வரின் காலை உணவு திட்டத்தின் மூலம் நெல்லையில் 348 பள்ளிகளில் 17 ஆயிரம் குழந்தைகள் பயன்: சபாநாயகர் அப்பாவு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: