மாநகரில் போக்குவரத்து நெரிசல்

கோவை, ஜூலை 30: கோவை அவினாசி சாலை, உக்கடம் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதில், அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை ரூ.1,621 கோடி மதிப்பில் 10.10 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதில், 306 தூண்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை 280-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தூண்கள் அமைக்கப்படும் முக்கிய சாலைகளில் சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கும் வகையில், போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கையை எடுத்துள்ளனர். குறிப்பாக, இச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் விரைந்து செல்லும் வகையில், சாலையில் இருந்த சிக்னல்கள் அகற்றப்பட்டு, ‘யூடர்ன்’ முறையில் வாகனங்கள் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைக்கு பலன் கிடைத்துள்ளது.

இருப்பினும், லட்சுமி மில்ஸ் சந்திப்பு, உப்பிலிப்பாளையம் சிக்னல், தண்டு மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் தினமும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இங்கு அமைக்கப்பட்ட யூடர்ன் முறையினால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு மாற்று வழியை போக்குவரத்து போலீசார் யோசிக்க ேவண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலம் பணியின் காரணமாக பேருந்துகள், கனரக வாகனங்கள் புட்டு விக்கி பாலம் வழியாக திருப்பி விடப்பட்டு இருந்தது. புட்டுவிக்கி பாலம் பகுதியில் குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பேருந்துகள், கனரக வாகனங்கள் அனைத்தும் ஆத்துப்பாலத்தில் இருந்து உக்கடம் சாலையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. இப்பகுதியில் மேம்பாலம் பணிகள் இன்னும் முடியாத நிலையில், பேருந்துகள், கனரக வாகனங்கள் திருப்பி விடப்பட்டு உள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் சிறிய அளவில் போக்குவரத்து போலீசார் மாற்றங்களை செய்துள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இச்சாலையை கடக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், வடகோவை சிந்தாமணி பகுதியில் போலீசார் தற்காலிக ரவுண்டானா அமைத்த நிலையில், அதன் காரணமாக அப்பகுதியிலும் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேம்பால பணிகள் மற்றும் ரவுண்டானா, யூடர்ன் முறைகள் காரணமாக அவதிப்பட்டு வரும் வாகன ஓட்டிகளுக்கு புதிய சிக்கலாக கடந்த சில நாட்களாக கோவை கூட்செட் ரோட்டில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகள் இருந்து வருகிறது.

பொதுவாக கூட்செட் சாலையில் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள், பெரியகடை வீதி வழியாக டவுன்ஹால், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்தனர். இப்பகுதியில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணியின் காரணமாக ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், இச்சாலையில் 500 மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை உள்ளது.
இதனால், பெரிய கடைவீதி சாலையிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. டூவிலர், கார்களில் வரும் பலர் கூட்செட் சாலையை பயன்படுத்த முடியாமல், வெரைட்டிஹால் ரோடு வழியாக கால்நடை மருத்துவமனையை அடைந்து டவுன்ஹால் மணிக்கூண்டு வருகின்றனர். இந்த கூட்செட் ரோட்டில் நடந்து வரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநகரில் கூட்செட் ரோடு, உப்பிலிப்பாளையம் சிக்னல், உக்கடம், பெரியகடை வீதி, சிந்தாமணி மற்றும் புரூக்பீல்டு சாலை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் போக்குவரத்து போலீசார் தொடர்ந்து பணியில் இருந்தாலும், போக்குவரத்து பாதிப்பை கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே, போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு பயணத்தை எளிதாக்கும் வகையில் மாற்று வழியை கண்டுபிடிக்க வேண்டும் எனவும், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, டவுன்ஹால், உக்கடம் பகுதிகளுக்கு டிராபிக் இல்லாமல் செல்லும் வகையில் நடவடிக்கையை போலீசார் எடுக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாநகரில் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Related Stories: