மத்திய அரசுக்கு தரப்படும் 10 கோடி மருந்து கோவிஷீல்டு தடுப்பூசி விலை 200: சீரம் நிறுவனம் அறிவிப்பு

புதுடெல்லி: “மத்திய அரசுக்கு முதலில் வழங்கும் 10 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு சலுகை விலையில் 200க்கும், அரசு அனுமதி அளித்தால் தனியாருக்கு அதிகபட்சமாக ₹ 1,000க்கும் வழங்கப்பட உள்ளது”, என்று சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அதர் பூனவாலா தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் அனுமதி அளித்தது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்யும் உரிமத்தை புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அதர் பூனவாலா நேற்று கூறியதாவது: கோவிஷீல்டு தடுப்பூசி அரசுக்கு சிறப்பு சலுகை விலையில் 200க்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான நடைமுறைகள் இன்னும் 7 முதல் 10 நாட்களுக்குள் முடிவடையும் பட்சத்தில், தடுப்பூசி வினியோகம் விரைவில் தொடங்கப்படும். முதல் கட்டமாக இந்த விலையில் அரசுக்கு 10 கோடி டோஸ்கள் வினியோகிக்கப்பட உள்ளது. இதில், 5 கோடி தடுப்பூசி டோஸ்கள் இன்னும் சில நாட்களில் வினியோகிக்கப்படும். வரும் ஜூலைக்குள் மேலும் 3 கோடி டோஸ்கள் வினியோகிக்கப்பட இருக்கிறது.அரசு அனுமதி அளித்தால், தனியாருக்கு அதிகபட்ச சில்லறை விற்பனைக்கு 1000க்கு விற்கப்பட உள்ளது. மேலும், இதற்கான பூஸ்டர் டோஸ் 1000ம் சேர்த்து மொத்தம் 2000க்கு விற்கப்படும். தனியார் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தினால் மட்டுமே சில்லறை விற்பனைக்கு கொடுக்க முடியும். இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை மாதத்துக்குள் 7 முதல் 8 கோடி தடுப்பூசி வினியோகிக்கப்படும். மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும். தற்போது 5 கோடி தடுப்பூசி மருந்துகள் தயாராக உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்….

The post மத்திய அரசுக்கு தரப்படும் 10 கோடி மருந்து கோவிஷீல்டு தடுப்பூசி விலை 200: சீரம் நிறுவனம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: