பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு: தினமும் 45 கி.மீ. அலைக்கழிப்பதாக புகார்

கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க முடியாது என  டாக்டர்கள் கூறியதால் அவர் தினமும் 45 கிலோ மீட்டர் பயணம் செய்து கோவை அரசு மருத்துவமனையில் ஊசி போடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  கோைவ மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். கூலி தொழிலாளி. இவரின் மனைவி கார்த்திகா (19). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சென்றார். அப்போது, அவர் கருத்தரித்து இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.

பொள்ளாச்சியில் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கோவை அரசு மருத்துவமனையில் நரம்பு தொடர்பான மருத்துவரிடம் சிகிச்சைக்காக பரிந்துரை செய்தனர். கார்த்திகாவுக்கு ரத்தம் உறையும் தன்மை அதிகரித்து இருந்தது. இதனால், ரத்தம் உறையும் தன்மையை குறைக்க குழந்தை பிறக்கும் வரை தினமும் ஊசி போட வேண்டும் என டாக்டர்கள்  தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து கோட்டூரில் இருந்து தினமும் கோவை அரசு மருத்துவமனைக்கு வர இயலாது எனவே பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எழுதி கொடுத்தால் அங்கேயே ஊசி போட்டுக்கொள்வதாக கார்த்திகா கூறியுள்ளார். இதற்கு டாக்டர்கள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஊசி போட பரிந்துரைத்தனர்.

இந்நிலையில், கார்த்திகா தன் தாயுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பணியில் இருந்த டாக்டர்கள், உன் ஒருவருக்காக விலையுர்ந்த ஊசியை வாங்கி போட முடியாது என கூறினர். இதனால், வேறுவழியின்றி தினமும் 45 கிலோ மீட்டர் பயணம் செய்து கோவை அரசு மருத்துவமனையில் ஊசி போட்டு வருகிறார்.  எனவே பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தனக்கு ஊசி போட வழிவகை செய்ய வேண்டும் என கர்ப்பிணி கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணா கூறுகையில், “இது தொடர்பாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் விசாரிக்கப்படும். பின், அவருக்கு ஊசி வாங்கி போட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: