போலி ஆவணம் மூலம் சொத்தை அபகரிக்க முயன்ற பெண் அதிரடி கைது

சின்னசேலம், ஜூன் 28: சின்னசேலம் அருகே போலி ஆவணம் மூலம் சொத்தை அபகரிக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டதுடன், உதவியாக இருந்த ஆவண எழுத்தர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சின்னசேலம் அருகே தகரை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (66). இவர் சின்னசேலம் விஜயபுரம் பகுதியை சேர்ந்த சின்னப்பொண்ணு மற்றும் ரமேஷ் என்பவரிடம் இருந்து சேர்த்து 149 சென்ட் கிரையம் பெற்று தன்னுடைய பெயரில் பட்டா மாற்றம் செய்து பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சின்னப்பொண்ணுவின் மகன் பாலசுப்பிரமணியன் கடந்த 27.7.2008ல் இறந்துவிட்டார். அதனால் சின்னப்பொண்ணுவின் மருமகள் மணிமேகலை(39) இழந்த சொத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த 7.5.2008ல் எழுதப்பட்டதாக ஒரு உயிலை திருச்சி அருகே திருவெரும்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தயார் செய்ததாக தெரிகிறது. மேலும் அந்த போலி ஆவணத்தை வைத்து கோவிந்தராசு மீது கள்ளக்குறிச்சி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தள்ளுபடி ஆனது. இதையடுத்து கோவிந்தராசு போலி ஆவணம் தயாரித்ததாக சென்னை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவு செய்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் மணிமேகலை போலி ஆவணம் தயாரிக்க முத்திரைத்தாள் விற்பனையாளர் பெரியசாமி, சாட்சியாக வாசுதேவனூர் அய்யம்பெருமாள், மண்டகப்பாடி துரைராஜ், ஆவண எழுத்தராக பழனி ஆகியோர் உதவியது தெரிந்தது. இதையடுத்து சின்னசேலம் போலீசார், மணிமேகலை உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து மணிமேகலையை கைது செய்தனர்.

The post போலி ஆவணம் மூலம் சொத்தை அபகரிக்க முயன்ற பெண் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: