பொய் புகாரை சட்டரீதியாக சந்திக்க தயார்: கேளம்பாக்கம் ஊராட்சி தலைவர் அறிக்கை

 

திருப்போரூர்: முறைகேடு நடந்ததாக கூறப்படும் பொய்ப்புகாரை சட்டரீதியாக சந்திக்க தயார் என்று கேளம்பாக்கம் ஊராட்சி தலைவர் தெரிவித்துள்ளார். திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறயிருப்பதாவது: கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற நிதியிலிருந்து ரூ.1 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக சிலர் நேற்று காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்து, ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த புகாரில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. கேளம்பாக்கம் பகுதியை சாராத சிலரை பணம் கொடுத்து அழைத்து சென்று புகார் கொடுத்துள்ளனர்.

தனி நபர்கள் சிலர் தங்களின் பலத்தை பயன்படுத்தி ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு, பொது பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததால் ஆத்திரமடைந்து, இதுபோன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். மேலும், கடும் நிதி நெருக்கடியிலும், மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வரும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் மீது வேண்டுமென்றே புழுதி வாரி தூற்றும் நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல்கள் வழங்கப்பட்டிருந்தால், அது முறையான செலவுதானே என்பது அனைவருக்கும் தெரியும். அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், ஊராட்சி நிர்வாகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு இதுபோன்ற பொய்யான புகார்கள் அளிப்பவர்கள் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பொய் புகாரை சட்டரீதியாக சந்திக்க தயார்: கேளம்பாக்கம் ஊராட்சி தலைவர் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: