பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சியில் எட்டி தொடும் உயரத்தில் இருந்த மின் கம்பிகள் சீரமைக்கப்பட்டது

பொன்னமராவதி, ஆக. 24: தினகரன் செய்தி எதிரொலியாக பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சியில் எட்டி தொடும் உயரத்தில் இருந்த மின் கம்பிகள் சீரமைக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சியில் இருந்து ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலையின் நடுவே மிகவும் தாழ்வாக மின் கம்பி சென்றது. மிகவும் தாழ்வாக மின்சார கம்பி சென்றதால், அதன் வழியே இருசக்கர வாகனங்களை தவிர்த்து மற்ற எந்த வாகனங்களும் அந்த சாலையின் வழியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் விளையும் காய்கறிகளை பொன்னமராவதி சந்தைக்கு கொண்டு செல்வதற்கு விவசாயிகள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர்.

மயானம் அருகே அமைந்துள்ளதால் மயானத்திற்கு இறந்தவர்கள் உடலை கொண்டு செல்லும் போதும் சிக்கல் எழுந்தது. மேலும் எட்டி தொடும் அளவில் மின்கம்பிகள் இருந்ததால் மாடு மேய்க்க செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்தனர். மிகவும் சேதம் அடைந்த மின்கம்பம் ஒன்றும் அங்கு இருந்தது.அதற்கு மாற்றாக புதிய கம்பம் அதன் அருகில் ஊன்றப்பட்டு 5ஆண்டுகளாகியும் அதில் மின்சார கம்பியை செல்லாமல் பழைய சேதம் அடைந்த கம்பியின் வழியே மின் கம்பிகள் சென்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க கோரியும், எலும்புக்கூடு போல் காணப்பட்ட மின்கம்பத்தின் வழியே மின்சாரம் செல்லாமல் புதிதாக ஊன்றப்பட்ட கம்பத்தின் வழியே மின்சாரம் செல்வதற்கு வழி ஏற்படுத்த வேண்டும் என தினகரன் நாளிதழில் கடந்த 20ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு சாலையின் குறுக்கே தாழ்வாக சென்ற மின் கம்பிகளையும், எலும்புக்கூடு போல் காட்சி அளித்த மின்கம்பத்தையும் சீரமைத்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழையும், சீரமைப்பு செய்த மின்வாரிய அதிகாரிகளையும் பொதுமக்கள் பாராட்டினர்.

The post பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சியில் எட்டி தொடும் உயரத்தில் இருந்த மின் கம்பிகள் சீரமைக்கப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: