நாகர்கோவில்: வடசேரி பஸ் நிலையத்தில் கண்டக்டர் இல்லாத என்ட் டூ என்ட் பஸ்களுக்கு டிக்கெட் எடுக்க பயணிகள் திணறி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் சமீபத்தில் புதிய பேருந்துகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சுமார் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் படிப்படியாக இயக்கப்பட உள்ளன. இவ்வாறு இயக்கப்பட்டு வரும் புதிய பஸ்களை முக்கிய நகரங்களுக்கு இடையே கண்டக்டர் இல்லாத பஸ்களாக இயக்க போக்குவரத்து கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி குமரி மாவட்டத்துக்கு முதற்கட்டமாக வந்துள்ள 30 புதிய பஸ்களில், 20 புதிய பஸ்களை நாகர்கோவில் திருநெல்வேலி இடையே கண்டக்டர் இல்லாத என்ட் டூ என்ட் பஸ்களாக இயக்கி வருகிறார்கள். ஏற்கனவே இயங்கிய என்ட் டூ என்ட் பஸ்கள், மாற்று வழித்தடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கண்டக்டர் இல்லாத என்ட் டூ என்ட் பஸ்களுக்கான டிக்கெட்டுகள் பஸ் நிலையத்தில் வினியோகம் செய்யப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகிறார்கள். வேலை நாட்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். சுமார் ஒன்றரை மணி நேரத்தில் திருநெல்வேலி சென்றடையும் என்பதால், அதிகமாக என்ட் டூ என்ட் பஸ்களை தான் பயணிகள் விரும்புகிறார்கள். இந்த பஸ்களுக்கு டிக்கெட் கொடுக்க வடசேரி பஸ் நிலையத்தில் இன்னும் சிறப்பு கவுண்டர்கள் எதுவும் அமைக்கப்படவில்லை. பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள குளிர்சாதன அறையில் டேபிள் அமைத்து, அங்கு வைத்து டிக்கெட் வினியோகம் நடக்கிறது. 3 கண்டக்டர்கள் டிக்கெட் வினியோகம் செய்கிறார்கள். இதை கண்காணிக்க 2 செக்கிங் இன்ஸ்பெக்டர்கள், 2 உதவி மேலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காலை, மாலை வேளையில் டிக்கெட் வாங்க கடுமையான நெருக்கடி உள்ளது.
இதே போல் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் என்ட் டூ என்ட் பஸ்களுக்கு பயணிகள் ஏறி அமர்ந்த பின்னர் 2 கண்டக்டர்கள் டிக்கெட் கொடுத்து விட்டு கீழே இறங்கிய பின்னர் பஸ் புறப்பட்டு செல்கிறது. முன்பெல்லாம் என்ட் டூ என்ட் பஸ்களில் இருக்கைகள் நிரம்பியதும், பஸ் புறப்பட்டு விடும். கண்டக்டர் நாங்குநேரி டோல்கேட் வரை கூட டிக்கெட் வினியோகம் செய்வார். ஆனால் இப்போது டிக்கெட் வினியோகம் செய்வதற்காகவே இருக்கைகள் நிரம்பிய பின்னரும் கூட 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை பஸ் காத்திருந்து, அதன் பின்னர் தான் புறப்பட வேண்டிய நிலை உள்ளது.
இதே போல் என்ட் டூ என்ட் பஸ்சில் தானியங்கி கதவு கிடையாது. பஸ் புறப்பட்டதும், முன் இருக்கையில் அமர்ந்துள்ள பயணி தான் கதவை மூட வேண்டிய நிலை உள்ளது. இதே போல் நாகர்கோவில் திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தோவாளை பகுதியில் இரு இடங்களில் பால வேலை நடக்கிறது. நெருக்கடி காரணமாக இந்த பாலத்தை கடக்க பஸ்களுக்கு 5 நிமிடங்கள் வரை கூடுதல் ஆகிறது. இந்த பகுதியில் எதிரெதிரே பஸ்கள் செல்லும் சமயத்தில் என்ட் டூ என்ட் பஸ்சில் பயணி தான் கண்டக்டர் போல் கண்ணாடி வழியாக சைடு பார்க்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கண்டக்டர் நியமித்து தான் பஸ்களை இயக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கண்டக்டருடன் 4 பஸ்கள்இதற்கிடையே நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் காலை வடசேரி பஸ் நிலையத்தில் என்ட் டூ என்ட் பஸ்களுக்கு நூற்றுக்கணக்கான பயணிகள் காத்திருந்தனர். டிக்கெட் எடுக்க அவர்கள் நெரிசலில் சிக்கி தவித்தனர். இதனால் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். நிலைமையை சமாளிக்க சாதாரண பஸ்கள் வரவழைக்கப்பட்டு அவை என்ட் டூ என்ட் பஸ்களாக கண்டக்டருடன் இயக்கப்பட்டன. 4 பழைய பஸ்கள் இதேபோல் கண்டக்டருடன் என்ட் டூ என்ட் பஸ்களாக புறப்பட்டு சென்றன. போக்குவரத்து நெருக்கடியால் புதிய பஸ்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!